TN Cabinet Reshuffle : "மேயர்களுக்கு அடுத்து அமைச்சர்கள்தான்” நீக்கமா ? மாற்றமா ? பதற்றத்தில் தமிழக கேபினட்..!
Tamil Nadu Cabinet Reshuffle: ”முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன்பே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது”
கள்ளக்குறிச்சி விவகாரத்துக்கு நடுவே பரபரப்பாக தமிழக சட்டப்பேரவை நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதியாக அமைச்சரவை மாற்றத்திற்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளார் ஸ்டாலின். விரைவில் அவர் வெளிநாடு செல்லவுள்ள நிலையில், அதற்கு முன்பு இதுகுறித்த அதிரடியான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வருவதால்.. கோட்டையே பரபரத்து கிடக்கிறது.
எப்படியும் இந்த முறை அமைச்சரவையில் பதவி வாங்கி விட வேண்டும் என ஒரு குரூப்பும், இருக்கும் அமைச்சர் பதவியை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என ஒரு குரூப்பும் திமுக தலைமையிடம் முட்டி மோதி வருகிறது. சரி எலக்சனுக்கு முன்னாடி வேண்டாம், ரிசல்ட் வந்தவுடன் வேண்டாம், அசெம்ப்லி முடியட்டும் என நினைத்து அமைச்சரவை மாற்றத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார் ஸ்டாலின். இதற்காக கட்சி சார்பிலும், உளவுத்துறை சார்பிலும் தனித்தனி ரிப்போர்ட்டுகள் தயாராக ஸ்டாலினின் மேஜையில் இருக்கின்றன.
அமைச்சர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி ?
குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலின் போது சில அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்றும் சிலர் துறை ரீதியாக சரியாக செயல்படாமல், அரசு பங்களாவிலேயே அதிக நேரத்தை செலவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட, அமைச்சர்களின் பட்டியல் குறித்து தலைமைக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது.
இந்நிலையில் ஒரே நேரத்தில் பல்வேறு அதிரடிகளுக்கு தயாராகி வருகிறது திமுக தலைமை, அதன் ஒரு பகுதியாக கோவை, நெல்லை மாநாகராட்சி மேயர்களை ராஜினாமா செய்யவைத்து முதல் விக்கெட்டை தூக்கியுள்ளார் ஸ்டாலின். அடுத்ததாக அமைச்சர்களில் சிலரின் விக்கெட் விழுவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
துறைகள் மாற்றமா ஒரே அடியாக நீக்கமா..?
சில அமைச்சர்களின் துறைகள் மாற்றம், சில அமைச்சர்கள் ஒரே அடியாக மாற்றம் என தகவல் பரவி வருகிறது. அதில் குறிப்பாக குறிப்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பெயர் நீண்ட நாட்களாகவே ரேடாரில் இருந்து வருகிறது, அவருக்கு எதிராக உள்ளூர் திமுகவிலேயே கோஸ்டி பூசல் நிலவி வந்த நிலையில், கட்சி ரீதியாக முதற்கட்ட நடவடிக்கை மேற்கொண்ட திமுக தலைமை, தற்போது அவரின் பதவியை பறிக்கவும் தயாராகிவருகிறது. குறிப்பாக அதன் பின்னணியில் மூத்த அமைச்சரும், திமுகவின் துணை பொதுச்செயலாளருமான பொன்முடியின் செயல்பாடுகள் இருப்பதாக சொல்லப்டுகிறது. அதனால் இம்முறை அவர் அமைச்சரவையில் இருந்து கழட்டி விட படும் பட்சத்தில், இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் ஆவடி நாசர் ஸ்டாலின் கேபினேட்டில் கம் பேக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.
அடிபடும் அமைச்சர்களின் பெயர்கள் என்னென்ன ?
மேலும் ஹிட் லிஸ்டில் அமைச்சர் மதிவேந்தன் பெயரும் அடிப்பட்டு வருகிறது. குறிப்பாக வனத்துறை அமைச்சராக அவருடைய செயல்பாடுகள் ஸ்டாலினுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், அண்மையில் உயர்நீதிமன்றத்தால் சீல் வைக்கபட்ட ஒரு தனியார் ரிசார்ட்டில் அமைச்சர் மதிவேந்தன் தங்கியதாக வெளியான தகவலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததும் குறிப்படத்தக்கது. ஆனால், அருந்ததியர் சமூகத்தை திமுக சார்பில் பிரதிநிதித்துவப்படுத்த சட்டமன்றத்தில் மதிவேந்தன் ஒருவர் மட்டுமே இருப்பதால், அவரின் துறை மட்டுமே மாற்றபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ரகுபதிக்கு துறை மட்டுமே மாற்றப்படும் என தகவல்
அடுத்ததாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது, நீட் விவகாரம், ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விவகாரங்களில் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் விதமாக இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், இங்கும் செட்டியார் சமூகத்தின் முகமாக சட்டமன்றத்தில் இவர் மட்டுமே இருப்பதால், அவருக்கும் அதிகபட்சம் துறை மட்டும் மாற்றபட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
அதே வேளையில், போக்குவரத்து துறை அமைச்சராக தொடக்கத்தில் நியமிக்கபட்ட ராஜகண்ணப்பன் சில சர்ச்சைகளின் காரணமாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றபட்டார், ஆனால் தற்போது ஸ்டாலினின் குட் புக்கிற்கு மீண்டும் திரும்பியுள்ள அவருக்கு பொர்ட்போலியோவில் கூடுதல் பொறுப்பு வழங்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சக்கரபாணியின் செயல்பாட்டில் மந்தமாகும் உணவுத்துறை?
அதே போல், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த உணவுத்துறை அமைச்சரான சக்கரபாணியின் மெத்தனமான செயல்பாட்டாலும், நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கி கொள்வதில் அவருக்கு இருக்கும் சிரமத்தாலும் துறை ரீதியாக அங்கே பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யும், பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான விலையை உடனடியாக தர முடியாதது உள்ளிட்ட பிரச்னைகள் சர்ச்சையானது.
அவரோடு, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் கூடுதலாக உள்ள மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை, வேறோரு எனெர்ஜிட்டிக் அமைச்சருக்கு மாற்றி கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே போன்று கொங்கு மண்டலத்தை சேர்ந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ள கோயில்சாமிநாதனும் வேறு ஒரு துறைக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.