TN Cabinet Reshuffle : “ரிப்போர்ட் ரெடி – எச்சரித்த முதல்வர்” விரைவில் அமைச்சரவை மாற்றம்..!
”கயல்விழி செல்வாராஜுக்கு பதில் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட வாய்ப்பு”

சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்த பின்னர் தமிழ்நாடு அமைச்சரவை மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், 6வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, ’உங்கள் எல்லோரையும் பற்றிய ரிப்போர்ட் தயாராகி வருகிறது. மாற்றத்திற்கு எல்லோரும் தயாராக இருங்க’ என முதலமைச்சரே நேரடியாக கூறியதால், அந்த வார்த்தை பல அமைச்சர்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.
ஏன் இந்த அமைச்சரவை மாற்றம் ?
அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர் விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதும், சிலரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததும், சிலர் அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு ஆட்சிக்கே தான் – தான் அதிபதி போன்று செயல்பட்டு வருவதையும் தடுக்க நினைத்த கட்சியின் மூத்த நிர்வாகிகளும், சீனியர் அதிகாரிகளும் இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுச் சென்று இப்படியான ஒரு மாற்றத்தை நிகழ்த்த முடிவு எடுத்துள்ளனர்.
பொறுப்பின்றி பேசுபவர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டம்
சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்ற பொறுப்புகளை உணராமல் தான்தோன்றித்தனமாக சில அமைச்சர்கள் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பொது இடங்களில், மேடைகளில் பேசும்போது ஆட்சிக்கு களங்க விளைப்பது மாதிரி பேசுவது, பொதுமக்களின் கோபத்தை தூண்டும் விதத்தில் செயல்படுவது, அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பெருமையாக பேசுவதற்கு பதில், அதனை சிறுமைப்படுத்தும் விதமாக உளறுவது என தன்னுடைய பதவிக்கோ பொறுப்புகோ சம்பந்தமே இல்லாத மாதிரி நடந்து வரும் 3 அமைச்சர்களிடமிருந்து துறையை பறிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கக் கரண்டியை கடித்துக்கொண்டே பிறந்ததாக நினைக்கும் அமைச்சர்கள்
அதே நேரத்தில், சில அமைச்சர்கள் பிறக்கும்போதே தங்கக் கரண்டியை கடித்துக்கொண்டு பிறந்தது மாதிரியும், நடக்கத் தொடங்கும்போதே அமைச்சரானது மாதிரியும் தங்களை நினைத்துக்கொண்டு, கோரிக்கைகளுடன் வரும் கட்சிக்காரர்கள், மக்களை உதாசீனப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதும், பணம் படைத்தவர்களையும், வசதி வாய்ப்பு உள்ளவர்களை மட்டுமே தங்க தாம்பூலத்தில் வைத்து அவர்கள் வரவேற்று பேசு வருவதும் உளவுத்துறை மூலம் முதல்வருக்கு ரிப்போர்ட் போயுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த முதலமைச்சர் அப்படியான பூர்ஷ்வா மனநிலையில் இருக்கும் 2 அமைச்சர்களின் இலாக்ககளை பறித்து டம்மியான இலாக்காக்களை அவர்களுக்கு கொடுக்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகளை அதிகாரிகள் மூலம் செய்து வருகிறார் என கூறப்படுகிறது.
பொன்முடிக்கு சிக்கல் ?
பெண்கள் குறித்து அநாகரிகமான விதத்தில் அமைச்சர் பொன்முடி பேசிய நிலையில், அதற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தார் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அதன்பிறகு உடனடியாக பொன்முடியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி, திமுக தலைவரான மு.க.ஸ்டாலினே உத்தரவு பிறப்பித்தார். வழக்கமாக, இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தும் பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரிலேயே வரும் நிலையில், பொன்முடியின் தொடர் செயல்பாடுகளால் அதிருப்தியடந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் அதிகாரத்தை பயன்படுத்தியே பொன்முடியை நீக்கினார்.
இந்நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று கனிமொழி பேட்டி அளித்த பிறகு தமிழ்நாடு முழுவதும் பொன்முடி பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, அதிமுக இந்த விவகாரத்தை கையெலெடுத்து மாவட்டம் தோறும் ஆர்பாட்டங்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, பொன்முடி மீதான அமலாக்கத்துறை வழக்கும் நிலுவையில் இருக்கிறது.
இதன்காரணமாக, நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் பொன்முடியை நீக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. அவர் முதலமைச்சரை சந்தித்து பேசியிருந்தாலும், அவரை நீக்கினால்தால் மகளிர் மத்தியில் நற்பெயர் ஏற்படும் என்று முதல்வருக்கு அதிகாரிகள் தரப்பில் ஆலோசனை தரப்பட்டுள்ளது. இதனால், பொன்முடி அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அமைச்சர் மூர்த்தியின் இலாக்கா மாற்றம் ?
அதே நேரத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவரும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சராகவும் உள்ள மூர்த்தி குறித்தும் உளவுத்துறை சார்பில் ரகசிய ரிப்போர்ட் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பதிவு துறையில் நடைபெறும் பணியிடமாற்றம், நியமனங்கள் உள்ளிட்டவை குறித்து அந்த ரிப்போர்ட்டில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேலான பத்திரப்பதிவுகளுக்கு அங்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் நியமிக்கப்பட்டிருக்கும் நபர்கள் மூலம் முறைகேடுகள் நடப்பதாகவும் அது குறித்தும் விரிவாக விசாரித்து தன்னுடைய அறிக்கையில் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளதாகவும் நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, ஆண்ட பரம்பரை என் அமைச்சர் மூர்த்தி பேசிய வீடியோ சர்ச்சையான நிலையில், அவர் கட்சி நிர்வாகிகளிடமும் மதுரை மாவட்டத்தில் அவர் செயல்படும் விதம் குறித்தும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமைச்சர் மூர்த்தி, ஒரு புலனாய்வு பத்திரிகையாளரிடம் தொலைபேசி வாயிலாக, பேசிய ஆடியோவையும் உளவுத்துறை கைப்பற்றியுள்ளதாகவும் தேர்தல் நேரத்தில் அந்த ஆடியோ வெளியானால், அவருக்கு மட்டுமில்லாமல் மதுரை மாவட்டத்தில் பிற திமுக நிர்வாகிகளுக்கும் சிக்கல் வரும் என்று ரிப்போர்ட் கொடுத்துள்ளதாகவும் செனடாப் சாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
எனவே, தொடர்ந்து 4 ஆண்டுகளாக பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக நீடிக்கும் மூர்த்திக்கு இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது சிக்கல் வரவுள்ளதாக தெரிகிறது.
அமைச்சர் காந்தி மாற்றம் ?
அவர் மட்டுமின்றி, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான காந்தியின் செயல்பாடுகளில் முதல்வர் அதிருப்தி என்பதை விட அவர் கட்சி ரீதியாகவும் துறை சார்ந்தும் எந்த முன்னெடுப்புகளையும் எடுக்காமல் இருப்பதால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கவும் அதிகாரிகள் தரப்பு முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அவரது மகன் வினோத்திற்கு மட்டுமே தனக்கு பிறகு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கட்சிக்காரர்களிடம் ’கறார்’ காட்டி வருவதும் முதல்வரின் கவனத்திற்கு சென்ற நிலையில், அவரை அமைச்சரவையை விட்டு நீக்கி, அந்த மாவட்டத்தில் தேர்தல் பணிகளை மட்டுமே கவனிக்கச் சொல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மா.சு-மீது தொடரும் அதிருப்தி – இலாக்கா மாற்றமா?
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சிக்கிய ஞனசேகரன் வழக்கிற்கு பிறகு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான அபிப்பிராயத்தை முதல்வர் மாற்றிக்கொண்டுள்ளதாகவும், துறையிலும் அவரது செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லையென்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தன்னை மட்டுமே ப்ரோமோட் செய்து வீடியோ எடுத்து வெளியிடுவது, துறையில் நிலவும் சிக்கல்களையும் பிரச்னைகளையும் களைய முன்னெடுப்புகளை மேற்கொள்ளாமல், தன்னுடைய உதவியாளர்கள் மூலமாக வேறு சில விவகாரங்களை கவனிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது என அவர் மீதான அடுக்கடுக்கான புகார்களை, அவர் துறையை முன்னர் கவனித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் பட்டியல் போட்டு, உளவுத்துறை ரிப்போர்ட்டோடு சேர்த்து முதல்வரின் டேபிளில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கிண்டியில் கலைஞர் பெயரில் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்ட நிலையில், அங்கு போதிய மருத்துவர்கள் மற்றும் வசதிகளை சரிவர செய்துக்கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்கு செல்லும் நோயாளிகளை ராஜீவ்காந்திக்கும், ஓமந்தூரார் மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்கள் பரிந்துரை செய்வது தொடர் கதையாகி வருகிறது. ஆனால், இவற்றை பற்றியெல்லாம் அமைச்சர் கவனிக்க முடியாத சூழலில் இருப்பதாகவும், அப்படியே யாரேனும் ஒரு குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் வைத்துவிட்டால், அதனை மட்டுமே சமாளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் எழும் புகார்களும் முதல்வரின் கவனத்திற்கு தலைமைச் செயலகத்தின் முக்கிய இரு அதிகாரிகள் மூலம் கொண்டுச்செல்லப்பட்டுள்ளன.
இதனால், மா.சுப்பிரமணியனின் இலாக்கா மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கயல்விழிக்கு பதில் தமிழரசி அமைச்சர் ?
ஆதித் திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜை கடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது மனித வள மேம்பாட்டுத் துறைக்கு அமைச்சராகவும் அவர் வகித்த துறையை வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு ஒதுக்கியும் உத்தரவிடப்பட்டது. கடந்த முறை கயல்விழியின் இலாக்கா மாற்றத்திற்கு அவரரின் மந்தமான செயல்பாடுகளே காரணமாக இருந்த நிலையில், மனித வள மேம்பாட்டுத்துறையிலும் அவர் எதையுமே செய்யாத ஒருவராக இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் நிலவி வந்தன. மிகப்பெரிய துறை இல்லையென்றாலும் கொடுக்கப்பட்ட துறையில் என்ன செய்யலாம் என்பதை கூட யோசிக்காமல், தன் போக்கில் அவர் இருப்பதாகவும் இதனால் இந்த முறை நடைபெறும் அமைச்சரவை மாற்றத்தில் அவர் அமைச்சரவையில் இருந்தே நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
அதே நேரத்தில் அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட்டால், அவருக்குப் பதில் மானமதுரை எம்.எல்.ஏ தமிழரசிக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என்று நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
PTR-க்கு கூடுதல் அதிகாரம்
சட்டப்பேரவையில் தனக்கும் தன்னுடைய துறைக்கும் போதிய அதிகாரமும், நிதியும் இல்லையென்பதை வெளிப்படையாக பதிவு செய்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் PTR பழனிவேல்தியாகராஜனுக்கு கூடுதல் துறைகளை ஒதுக்கி, அவரை சரியாக பயன்படுத்துக்கொள்ள முதல்வர் முடிவு எடுத்திருப்பதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
அமைச்சரவை மாற்றம் உறுதி
ஒவ்வொரு அமைச்சர்களின் கள செயல்பாடுகள், அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், யாருடன் எல்லாம் பேசுகிறார்கள் என்பது முதல் அவர்களுடைய தனிப்பட்ட விவகாரங்கள் வரை உளவுத்துறை டீட்டெய்ல்ட் ரிப்போர்ட் தயார் செய்திருக்கிறது. அது மட்டுமின்றி, துறை ரீதியாக அமைச்சர்களின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்து மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2வரின் உத்தரவின்பேரில் துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் தனியாக ஒரு ரிப்போர்ட் சமர்பிக்கவுள்ளனர். இதுமட்டுமின்றி, கட்சி ரீதியாக அமைச்சர்களின் மாவட்டத்தில் அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி ? பொதுமக்கள் சந்திப்பு ? குறைகளை களைவது உள்ளிட்டவைகள் பற்றியும் சார்பு அணிகளிடம் ஒரு ரிப்போர்ட் பெறப்படவுள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.





















