TN Cabinet Reshuffle : ’விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம்?’ கலக்கத்தில் அமைச்சர்கள் - ஹிட் லிஸ்டில் 3 பேர்..!
’நிதி அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மாற்றி விட்டு, அவருக்கு பதில் தங்கம் தென்னரசுவை நிதி அமைச்சராக தேர்வு செய்யப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன - ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை’
ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பல அமைச்சர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
மூன்றாம் ஆண்டில் திமுக அரசு – மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம்?
திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த சூழலில் அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் சரியாக செயல்படாதவர்களை தூக்கி அடிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தயாராகிவிட்டதாக கோட்டை வட்டாரங்கள் பரபரக்கின்றன.
ஏற்கனவே, இரண்டு முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், 3வது முறையாக செய்யப்படவுள்ள மாற்றம் முக்கியமானதாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முதலில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் எழுந்த நிலையில், துபாயில் இருந்தபடியே அவர் வகித்த போக்குவரத்துத் துறையை அமைச்சர் சிவசங்கருக்கு வழங்கி, சிவசங்கர் கவனித்து வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை ராஜகண்ணப்பன் வசம் தந்தார் முதல்வர் ஸ்டாலின், இரண்டாவதாக, உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவைக்குள் கொண்டுவரும்போது 10 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக, வனத்துறையை கவனித்து வந்த அமைச்சர் ராமசந்திரனிடமிருந்து அந்த துறை பிடுங்கப்பட்டு, சுற்றுலாத்துறையை கவனித்து வந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு தரப்பட்டது. மதிவேந்தன் வகித்த சுற்றுலாத்துறை ராமசந்திரனுக்கு மாற்றி வழங்கப்பட்டது.
கலக்கத்தில் அமைச்சர்கள்
இந்நிலையில், தற்போது 3வது முறையாக செய்யப்படவுள்ள மாற்றத்தால் அமைச்சரவையில் உள்ள பலர் கலக்கத்தில் உள்ளனர். குறிப்பாக, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அதே சமூகத்தை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ அமைச்சர் ஆக்கப்படுவார் என கூறப்படுகிறது. அதில் சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ ராஜா அல்லது மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ஆகியோருக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அமைச்சரவையில் கீதா ஜீவன், கயல்விழி ஆகிய இருவர் மட்டுமே பெண்களாக இருப்பதால், கயல்விழியை நீக்கிவிட்டால் மகளிர் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்பதால், கயல்விழிக்கு பதில் மானாமதுரை எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான தமிழரசியை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக தேர்வு செய்ய முதல்வர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தகிக்கும் சூட்டில் ஊட்டி ராமசந்திரன்
அதேபோல, சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ஊட்டி ராமசந்திரன் மீது அடுக்கடுக்கான புகார்கள் முதல்வர் அலுவலகத்திற்கு சென்றிருப்பதாலும் அவரின் இலாக்கவும் மாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, அவரது மருமகன் பெயரில் இருக்கும் மேடநாடு எஸ்டேட்க்கு, விதிகளை மீறி, மலையை குடைந்து சாலை அமைத்த புகாரும் அது தொடர்பான விமர்சனங்களும் காலை சுற்றிய பாம்பாய் ராமசந்திரனை சுற்றிவருவதால் அந்த சிக்கலில் இருந்து அவர் தப்பிப்பது குதிரை கொம்பாய் இருந்து வருகிறது. இருந்தாலும், படுகர் சமுதாயத்தை சார்ந்த ராமசந்திரனை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டால் அந்த சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேறு யாரும் இல்லாத காரணத்தால், ராமசந்திரனின் இலாக்காவை மட்டும் மாற்ற அதிகாரிகள் முதல்வரிடம் ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிகிறது.
நாசர் மீது பாசம் – முடிவு எடுக்க முடியாத நிலையில் முதல்வர் ?
இவர்கள் இருவர் மட்டுமில்லாமல், பால்வளத்துறை அமைச்சர் நாசரின் செயல்பாடுகளிலும் சர்ச்சைகள் இருப்பதால் அவரிடமிருந்து அமைச்சர் பொறுப்பை திரும்ப பெற வேண்டும் என முதல்வரிடம் அதிகாரிகள் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், தன்னுடைய இளமை காலம் தொட்டு இப்போது வரை நெருக்கத்தோடும் விசுவாசமாகவும் இருப்பவர் நாசர் என்பதால், அவரிடமிருந்து அமைச்சர் பொறுப்பை பறிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தயங்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பால்வளத்துறைக்கு பதில் நாசருக்கு வேறு துறையை முதல்வர் ஒதுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அமைச்சரவையில இசுலாமிய சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் மஸ்தான், நாசர் என இரண்டு பேர் மட்டுமே இருப்பதாலும் நாசாரிடமிருந்து அமைச்சர் பொறுப்பை பறிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் பொறுப்பில் தொடரும் பிடிஆர்
நிதி அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் முதல்வரே விளக்கம் கொடுத்துவிட்ட நிலையில், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதோ அல்லது அவரின் இலாக்கவை மாற்றுவதோ இப்போதைக்கு இல்லை என்று தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால், சரியாக செயல்படாதவர்களாவும் அமைச்சரவையை விட்டு நீக்க முடியாதவர்களாகவும் இருக்கும் சீனியர் அமைச்சர்கள் சிலரின் இலாக்காக்கள் மாற்றப்படுவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.
நீக்கினால் மட்டுமே புதியவர்களுக்கு வாய்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தற்போது உச்சப்பட்சமாக 35 பேர் இருப்பதால் புதியவர்களை சேர்ப்பதற்கு சிலரை நீக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், சரியாக செயல்படாதவர்களாவும் விமர்சனத்திற்கு உள்ளானாவர்களாகவும் இருக்கும் ஒரு சில அமைச்சர்களை நீக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக சித்தரஞ்சன் சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதுவரை ஆலோசனை மட்டுமே செய்யப்பட்டிருக்கிறதே தவிர இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இருக்கா ? இல்லையா ?
அதோடு, ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே சுமூகமான சூழல் இல்லாத நிலையில், புதிய அமைச்சர்கள் இணைக்கப்பட வேண்டும் என்றாலோ இலாக்காக்கள் மாற்றப்படவேண்டும் என்றாலோ ஆளுநரின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. கூடுதலாக, புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்றே பதவியேற்க வேண்டிய மரபு இருப்பதாலும் அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே பதவி பிரமாணம் செய்ய வேண்டும் என்பதாலும் இணக்கமான சூழல் ஏற்படும் வரை அமைச்சரவை மாற்றத்தை தள்ளிப் போடலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த பேச்சுக்கு விரைவில் ஒரு முடிவு எட்டப்பட்டுவிடும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.