ஆளுநரின் செயல்பாட்டை உச்சநீதிமன்றம் விமர்சித்த பிறகும், ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை - கே எஸ் அழகிரி
ஆளுநரின் செயல்பாட்டை உச்சநீதிமன்றம் விமர்சித்த பிறகும் எதையுமே ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை - கே எஸ் அழகிரி
நெல்லை வண்ணார்பேட்டை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கூட்டாட்சி தத்துவம் இருக்கிற நாடு இது. இந்திய அரசியலமைப்பு இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை அங்கீகரிக்கிறது. ஒரு மாநிலத்தில் நடக்கும் சட்டம் தொடர்பான பிரச்சினையானாலு, லஞ்சம் தொடர்பான பிரச்சனையானாலும் அல்லது எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அந்த மாநில அரசிற்கு அதை பற்றி விசாரிக்க அதில் தன்னுடைய உரிமையை நிலை நாட்ட அதிகாரம் உள்ளது. அமலாக்கத்துறை இங்கு எந்த அராஜகம் செய்தாலும் அதை தமிழக அரசு கேட்கக்கூடாதா? தலைமை செயலாளருக்கு அந்த உரிமை இல்லையா? காவல்துறைக்கு அந்த உரிமை இல்லையா? இதை சொல்ல உதவி இயக்குனர் அளவில் என்ன உரிமை இருக்கிறது? இதை உள்துறை அமைச்சர் சொல்லியிருக்கலாம். அவர் சொன்னால் நாம் அதற்கு பதில் அளிக்கலாம். உதவி இயக்குனர் சொல்றதுக்கு பதில் அளிக்க முடியாது. தலைமை செயலாளர் அதை புறம்தள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மிக்ஜாம் புயல் சென்னையில் மிகப்பெரிய பேரழிவை கொடுத்தது. சுற்றுச் சூழலை பாதுகாக்க எவ்வளவோ காரியம் செய்கிறோம். எவ்வளவோ என்.ஜி.ஓக்கள் சுற்று சூழலை பாதுகாக்க பெரிய முயற்சி எடுக்கிறார்கள். ஆனால் ஒரு பொதுத்துறை நிறுவனம் இவ்வளவு அலட்சியமாக எப்படி இருந்தார்கள்? ஒரே நேரத்தில் வந்த எண்ணெய் கழிவு அல்ல, சிறுக சிறுக வந்த எண்ணெய் கழிவுகள். இதை எதையுமே கவனிக்காததன் விளைவுதான் இது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இனிமேலாவது எண்ணெய் நிறுவனம் இது போன்ற கவனக்குறைவான செயல்களில் ஈடுபடக்கூடாது.
மேலும் டெல்லியில் இருக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகமும், மாநில அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு ஒன்று அதை மூடவேண்டும், அல்லது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
”இந்தியா கூட்டணி கொள்கை ரீதியான ஒரு கூட்டணி, சித்தாந்த ரீதியான, வலிமை நிறைந்த ஒரு கூட்டணி. 4 மாநில தேர்தலிலும் கூட பாஜகவை விட காங்கிரஸ் தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. 40%-க்கும் மேலான வாக்குகள் எங்களிடம் இருக்கிறது. எனவே நீங்கள் தேர்தலை பின்னடைவை வைத்து எந்த முடிவிற்கும் வர முடியாது. 2002-இல் இதே மாதிரி பாஜக வென்றது. 2004 காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தோம். எனவே இவைகளை நாங்கள் சரி செய்வோம், சமன் செய்வோம். வெற்றி பெறுவோம். தேர்தல் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இன்று நெல்லையில் 3 மாவட்டங்களின் மாணவர் காங்கிரஸிடையே இந்த பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற இருக்கிறது. எனவே அமைப்பு ரீதியாக தேர்தலில் வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகளை கணக்கிட்டு செயல்படுகிறோம்” என்றார்.
”ஆளுநர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சினையிலும் யாரிடமாவது குட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறார். அது ஆளுனருக்கு அழகு அல்ல. வார்த்தைகளை அளந்து பேச வேண்டும், பேசுபவை சரியானது தானா என ஆராய வேண்டும். இரண்டுமே அவரிடம் இல்லை. அவசரப்பட்டு பேசும் மேடைப்பேச்சாளர் போன்று பேசுகிறார். அதன் பின் அதை சமாளிப்பதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளது. உச்ச நீதிமன்றம் கடுமையாக அவரை கண்டித்துள்ளது. அதன் பிறகும் அவர் ஆளுநராக இருப்பதே அதிசயம் தான். மற்றவர்கள் என்றால் இருக்க மாட்டார்கள், மாற்றிக்கொண்டு போவார்கள் அல்லது ராஜினாமா செய்து விடுவார்கள் என விமர்சித்தார்.
ஆளுநரின் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் விமர்சித்த பிறகு ஒரு ஆளுநர் அந்த இடத்தில் இருக்கக் கூடாது. இவ்வளவு சங்கடங்கள், அசிங்கங்கள் வருகிறது. அதை அவர் துடைத்துக் கொள்கிறாரே தவிர எதையுமே ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை" என்று தெரிவித்தார்.