ஷாஹின்பாக் பகுதியில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டப் பகுதி குடியிருப்புகள் அகற்றும் திட்டமா?.. டெல்லி மாநகராட்சி நடவடிக்கை!
டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் தெற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றவுள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கு டெல்லி காவல்துறை பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது.
டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சில மாதங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வந்த இடங்களில் தெற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றவுள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கு டெல்லி காவல்துறை பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது. டெல்லி காவல்துறை, டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகிய குழுக்கள் புல்டோசர்களுடன் இப்பகுதிக்கு வந்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காவல்துறையின் தென்கிழக்குப் பகுதியின் இணை ஆணையர் ஈஷா பாண்டே, `ஷாஹின் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையத்திற்குப் பாதுகாப்பு வழங்கவுள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி காவல்துறையின் ஆள் பற்றாக்குறை இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்த டெல்லி காவல்துறை, தற்போது மாநகராட்சி ஆணையம் வேண்டுகோள் விடுத்த பிறகு காவல்துறையினரைப் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பியுள்ளது.
கடந்த மே 5 அன்று, காவல்துறையினரில் போதிய ஆட்கள் இல்லையெனக் கூறப்பட்டிருந்த நிலையில், ஷாஹின் பாக் பகுதியின் கலிந்தி குஞ்ச் - ஜாமியா நகர் பகுதிகளில் குடியிருப்புகள் இடிக்கப்படுவது தள்ளிவைக்கப்பட்டது. மேலும், கடந்த ஏப்ரல் 28 அன்று, ஜசோலா பகுதியிலும், ஏப்ரல் 29 அன்று ஓக்லா பகுதியிலும் குடியிருப்புகளை இடிப்பதற்குப் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
முதல் கட்டமாக குடியிருப்புப் பகுதிகளை இடிக்கும் விதமாக, தெற்கு டெல்லி மாநகராட்சி ஆணையம் சுமார் 6 கடைகளை இந்த மாதத்தின் தொடக்கத்தில் துக்ளகாபாத் பகுதியில் இடித்தது. இந்தக் கடையின் உரிமையாளர்கள் தங்கள் கடைகள் இடிக்கப்படும் என்பதை எச்சரிக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நோட்டீஸ் எதனையும் மாநகராட்சி ஆணையம் வழங்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
இப்பகுதியில் குடியிருப்புகளை இடிக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் பாஜக கவுன்சிலர் ராஜ்பால் சிங், கடைக்காரர்களிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். `இவை சட்டவிரோத ஆக்கிரமிப்புகள். எனவே மாநகராட்சி ஆணையம் அதன் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. நாங்கள் தெருக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கவுள்ளோம். தெற்கு டெல்லியிலும், தென்கிழக்கு டெல்லியிலும் இந்தப் பணிகள் 10 நாள்களுக்கு நடக்கவுள்ளன. மக்களைச் சட்ட விரோதமாக தெருக்களை ஆக்கிரமிப்பு செய்து, பிறருக்குத் தொல்லை கொடுக்குமாறு தூண்டிவிடும் ஆம் ஆத்மி கட்சியைப் போன்றவர்கள் நாங்கள் இல்லை. இந்தப் பகுதிகளைப் பல முறை ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ எனக் கூறியுள்ளார் ராஜ்பால் சிங்.
தெற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மேயர் சூரியன் இந்த இடிப்பு நடவடிக்கைகளை முன்னின்று மேற்கொள்ள முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. மாநகராட்சி ஆணையர் தரப்பில் எதிர்ப்புகள் இருந்தாலும், பாஜகவின் டெல்லி மாநிலத் தலைவர் அதேஷ் குப்தாவின் ஆதரவோடு மேயர் சூர்யன் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.