கூட்டணியை சிதைக்க பிரவீன் சக்கரவர்த்தி முயற்சி.! தற்குறி என வெளுத்து வாங்கிய செல்வப்பெருந்தகை
உத்திரபிரதேசத்தை தாங்கி பிடிப்பவர்கள் பாஜகவை தாங்கி பிடிக்கிறார்கள். பிரவீன் சக்கரவர்த்தியின் குரல் ஆர் எஸ் எஸ் குரலாக இருக்கிறது. காங்கிரஸ் குரல் கிடையாது, இதனை எப்படி அனுமதிக்க முடியும் என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

பிரவீன் சக்கரவர்த்திக்கு எதிர்ப்பு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இதுவரை 2600 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரவீன் சக்கரவர்த்தி பேசுவது காங்கிரசின் குரல் கிடையாது. கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்குவதற்கு பிரவீன் சக்கரவர்த்தி ஈடுபட்டு வருகிறார்
கூட்டணியை சிதைக்க முயற்சி
தனி நபர் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் முயற்சிக்கிறார்கள். இதற்கும் காங்கிரசிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எப்போதும் கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தான் முடிவெடுக்கும். ராகுல் காந்தியின் பெயரை வைத்து அவருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இதனை செய்து வருகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் பலமாக இருக்கிறது. பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்றும் முயற்சியில் மறைமுகமாக சில சக்திகள் வேலை செய்து வருகிறார்கள்.
அது எங்கள் கட்சியில் இருந்தாலும் சரி வேற கட்சியில் இருந்தாலும் சரி, உளவு வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது. உத்தரபிரதேசம் புல்டோசர் ஆட்சி, ஏழை எளிய மக்களை புல்டோசர் கொண்டு இடிப்பது தான் உத்தரப்பிரதேசத்தின் ஆட்சி. உத்திரபிரதேசத்தை தாங்கி பிடிப்பவர்கள் பாஜகவை தாங்கி பிடிக்கிறார்கள். பிரவீன் சக்கரவர்த்தியின் குரல் ஆர் எஸ் எஸ் குரலாக இருக்கிறது. காங்கிரஸ் குரல் கிடையாது, இதனை எப்படி அனுமதிக்க முடியும். காங்கிரஸ்காரர்கள் எப்போதும் பாஜகவை தூக்கி பிடிக்க மாட்டார்கள் உத்தரப்பிரதேசத்தில் மிருகங்களின் ஆட்சி நடக்கிறது.
தற்குறிகள் இறையாகுகிறார்கள்
பிரவீன் காந்தியின் பேச்சு தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு புகார் அளித்துள்ளோம். ராகுல் காந்தி பெயரை பயன்படுத்தி காங்கிரசுக்கு களங்கம் விளைவிக்க யாரையும் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாற்றுத் தலைவரா பிரவீன் சக்கரவர்த்தி என கேள்வி எழுப்பியவர், இதையெல்லாம் அனுமதிக்க முடியாது என ஆவேசமாக தெரிவித்தார். எதையோ தெரியாமல் பேசியதே விட்டுட்டு இருக்கிறோம். ஆனால் தற்பொழுது உத்தரபிரதேச ஆட்சியை தூக்கி பிடிப்பது எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும். இந்தியா கூட்டணியை சிதைத்து விடலாம் என்று பாஜக அண்ணாமலை போன்றோர் பகல் கனவு காண்கிறார்கள். பாஜக அண்ணாமலை போன்றோரின் கனவுகளுக்கு எங்கள் கட்சியில் உள்ள சில தற்குறிகள் இறையாகுகிறார்கள் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.





















