(Source: ECI/ABP News/ABP Majha)
கிரகபிரவேசத்துடன் அரசியல் பிரவேசத்தை துவக்கும் சசிகலா! கெடு வைத்து கேம் ஸ்டார்ட்!
போயஸ்கார்டனில் புதிய வீடு கட்டும் சசிகலா, கிரகபிரவேசத்துடன் தன் அரசியல் பிரவேசத்தையும் அரங்கேற்றுவார் எனத்தெரிகிறது. எங்கு முடிந்ததோ அங்கிருந்து தான் பயணத்தை துவங்குவேன் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறார். இனி அடுத்தடுத்த பிரேக்கிங் செய்திகளை எதிர்பார்க்கலாம்!
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி தண்டனை முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலா, அதிமுகவை கைப்பற்றுவார், ஆட்சியை வழிநடத்துவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், சிறையிலிருந்து வந்த சசிகலா, ஓரிரு நாளில் தனது நிலைப்பாட்டை மாற்றி ‛அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக,’ அறிக்கை அளித்து, பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். சசிகலா வருகை, தேர்தல் சமயத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு நெருக்கடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலாவின் அறிவிப்பை தொடர்ந்து இடையூறு இன்றி, தேர்தலை அதிமுக சந்தித்தது.
முடிவில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைத்தது. எதிர்கட்சி அந்தஸ்து பெற்ற அதிமுக, 10 ஆண்டுகளுக்கு பின் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் துவங்கிய அக்கட்சியின் உட்கட்சி யுத்தம், எதிர்கட்சித் தலைவர் யார் என்பது வரை தொடர்ந்தது அனைவரும் அறிந்ததே. இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பிரசாரத்தின் போதே ஒதுங்கியதாக கூறிய சசிகலா, அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை சந்தித்து ஆசி வழங்கியதும், வேளாங்கன்னி, நாகூர் தர்கா, ஸ்ரீரங்கம் கோயில்களுக்கு விசிட் அடித்ததும், என்ன மாதிரியான மூவ் எடுத்துக் கொண்டிக்கிறார் சசிகலா என அரசியல் நோக்கர்களை சிந்திக்க வைத்தது.
சசிகலாவின் முடிவில் இருந்தது இரண்டு தான். ஒன்று, ‛தேர்தலில் ஒரு வேளை அதிமுக வெற்றி பெற்றால், தான் ஒதுங்கிக்கொண்டு சாதகம் ஏற்படுத்தியது தான் அதிமுகவின் வெற்றிக்கு காரணம்,’ என, கிளைம் செய்வது. மற்றொன்று, ஒரு வேளை அதிமுக தோற்றால், ‛தான் இல்லாதது தான் அதிமுக தோற்க காரணம்,’ என, கிளைம் செய்வது. எது நடந்தாலும், அது தனக்கு சாதகமாகவே இருக்கும் என்ற திட்டத்தில் தான் சசிகலா, ஒதுங்கும் அறிவிப்பை எடுத்திருந்தார். அதுமட்டுமின்றி, அவர் வந்த சமயம் எடப்பாடி, ஓபிஎஸ் வசம் ஆட்சி இருந்தது. என்ன தான் செல்வாக்கு வைத்திருந்தாலும் அதிகாரத்தை மீறி எதுவும் செய்ய முடியாது என்பதால் தான் சசிகலா அந்த முடிவுக்கு அப்போது வந்திருந்தார். அதிமுக தோல்வியை தழுவியதால், தான் முன்பே திட்டமிட்ட படி, தனது தலைமை இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என்கிற பாயிண்ட் தனக்கு கிடைத்திருப்பதை சசிகலா உணர்ந்துள்ளார்.
அவர் நகர்த்தும் காய்களுக்கு ஏற்றபடி அதிமுகவில் தலைமைகளுக்குள் மோதல். இதெல்லாம் தொண்டர்களிடம் கொண்டு சென்று மீண்டும் தலைமைப் பொறுப்பை பெறலாம் என்பதே சசிகலாவின் திட்டம். இதற்கான முன்னோட்டத்தை துவங்கிவிட்டார் சசி. ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகளிடம் போனில் பேசி மீண்டும் பரபரப்பை துவக்கியிருக்கிறார் சசிகலா.
தஞ்சை தெற்கு மாவட்ட பேராவூரணியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் சமீபத்தில் சசிகலா பேசிய ஆடியோ அதிக கவனத்தை பெற்றிருக்கிறது. அதில் சசிகலா பேசிய பேச்சுகள் இது தான்.
‛‛கொரோனா, ஜாக்கிரதையா இருங்க... விரைவில் நல்ல முடிவு எடுத்து சீக்கிரம் வந்துடுவேன். யாரும் கவலைப்படாதீங்க. சண்டை போட்டுட்டு இருக்காங்க... கஷ்டமா இருக்க! ரொம்ப கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்தோம். விரைவில் வந்துடுவேன். கொரோனா எல்லாம் முடியட்டும், தைரியமா இருங்க. நீங்கள் எல்லாம் கூட இருக்கும் போது எனக்கு என்ன கவலை. கட்சியை நல்லா கொண்டு வந்திடலாம்’’ என சசிகலா பேசும் இந்த ஆடியோ தான், இப்போதைக்கு அரசியலில் டாப் டாக்.
உண்மையில் இதை வெளியிட்டது சசிகலா தரப்பு தான் என்கிறீர்கள். ஏதோ சுரேஷ் என்பவரிடம் பேசிய பேச்சு இல்லை என்றும், ஒட்டுமொத்த அதிமுகவினருக்கும் சசிகலா தெரிவிக்கும் கருத்து இது தான் என்றும், அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ‛கொரோனா முடியட்டும்’ என அவர் தெரிவிக்கும் கெடு, இன்னும் சில நாட்களில் இருக்கலாம். அல்லது சில வாரங்களில் இருக்கலாம். பல மாதங்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே மீண்டும் சசி எண்ட்ரி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
'நான் மீண்டும் வருவேன்.. கட்சியை சரி செய்வேன்' - தொண்டரிடம் செல்போனில் பேசிய சசிகலா!
டிடிவி தினகரனோடு வருகிறாரா... அல்லது தனித்து அதிமுகவின் தலைமையை பெற முயற்சிப்பாரா போன்ற கேள்விகள் தான் தற்போது உலா வருகிறது. சசிகலாவின் இந்த மூவ் பற்றி தெரிந்திருந்தும், அதிமுக தலைமை அமைதி காக்கிறது.
எதிர்கட்சி தலைவர் தேர்வில் ஒருமித்த கருத்து இல்லாத அதிமுகவில், சசிகலாவிற்கு எதிராக எப்படி அக்கட்சி தலைமை காய் நகர்த்தப் போகிறது என்பது ஒருபக்கம், இரட்டை தலைமையில் ஏற்பட்டுள்ள உரசலால் தொண்டர்கள் தொய்வடைந்திருப்பது மறுபக்கம் என அதிமுகவிற்கு அடுத்த சோதனை காலம் ஆரம்பமாகிறது. போயஸ்கார்டனில் புதிய வீடு கட்டும் சசி, கிரகபிரவேசத்துடன் தன் அரசியல் பிரவேசத்தையும் அரங்கேற்றுவார் எனத்தெரிகிறது. எங்கு முடிந்ததோ அங்கிருந்து தான் பயணத்தை துவங்குவேன் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறார். இனி அடுத்தடுத்த பிரேக்கிங் செய்திகளை எதிர்பார்க்கலாம்!
ஜெயலலிதா வீட்டின் எதிரே புதிய வீடு: போயஸ் கார்டனில் மீண்டும் சசிகலா