Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி; சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு!
Samathuva Makkal Katchi: பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்(Sarath Kumar) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் களைக்கட்டியுள்ளது. ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடக்கலாம் என்பதால் அரசியல் கட்சிகள் இப்போது இருந்தே இறுதிக்கட்ட பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றது. ஒருபக்கம் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவாத்தை என பணிகள் சென்று கொண்டிருக்க, மறுபக்கம் மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்ளும் படலமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாதக ஆகிய 4 முனை போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக சமத்துவ மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சித்தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பிப்ரவரி 28 ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து, பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று (05.03.2024) மத்திய அமைச்சர் எல்.முருகன் அவர்கள், தேசிய செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் H.ராஜா அவர்கள், பாஜக தமிழக பொறுப்பாளர் மற்றும் தேசியச் செயலாளர் அரவிந்த்மேனன் அவர்கள் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடனான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு pic.twitter.com/UqJqPj83tp
— R Sarath Kumar (@realsarathkumar) March 6, 2024
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன்.மற்ற விபரங்கவை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.