(Source: ECI/ABP News/ABP Majha)
Rajiv Gandhi death anniversary: ரயில் டிக்கெட்டுக்கு கணினி! மூலைமுடுக்கெல்லாம் PCO! ராஜீவ்காந்தி செய்த சூப்பர் சம்பவங்கள்!
40 ஆவது வயதில் இளம் பிரதமர் என்ற பெருமையுடன் பொறுப்பை ஏற்றார் ராஜீவ் காந்தி. பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த காங்கிரசின் கடைசி பிரதமர் என்ற பெருமையும் பின்னாட்களில் அவருடன் ஒட்டிக்கொண்டது
இந்தியாவின் இளம் பிரதமராக அறியப்பட்ட ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நவீனமயத்தை நோக்கி இந்தியாவை அழைத்துச்சென்றதில் முக்கியமான நபராக ராஜீவ் காந்தி அறியப்படுகிறார். மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கு கணினியை கொண்டு வந்தது முதல், இந்தியாவிலேயே குறைந்த செலவில் தொலைபேசி இணைப்பகங்களை உருவாக்கி மூலைமுடுக்கெங்கும் PCO-மையங்களை உருவாக்கியது வரை இந்தியாவை தொலைத்தொடர்பை நோக்கி அழைத்து சென்றதற்காக அவர் நினைவுக்கூறப்படுகிறார்.
அண்ணனின் மரணத்தால் அரசியல் பயணம்
இந்திரா காந்தியின் அரசியலுக்கு பக்கபலமாக இருந்த அவரது மகன்களில் ஒருவரான சஞ்சய் காந்தி 1980ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார். அப்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியாளராக லண்டனில் இருந்த ராஜீவ்காந்தி தனது இளைய சகோதரர் மரணத்திற்கு பிறகு தீவிர அரசியலுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1981ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அவரது சகோதரரின் தொகுதியான அமேதி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட லோக் தளம் வேட்பாளர் ஷரத் யாதவை 237,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். 1982ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப்போட்டிகளை ஒருங்கமைத்ததில் ராஜீவ் காந்திக்கு முக்கியப்பங்குண்டு.
இந்தியாவை ஆள வழிவகுத்த இந்திராவின் மரணம்
1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி பிரதமர் இந்திரா காந்தி, அவரது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டு 19 நாட்களுக்குப் பிறகு நடந்த பேரணி ஒன்றில் பேசிய ராஜீவ் காந்தி "இந்திரஜியின் கொலையைத் தொடர்ந்து நாட்டில் சில கலவரங்கள் நடந்தன. மக்கள் மிகவும் கோபமாக இருந்தார்கள், சில நாட்களுக்கு இந்தியாவே அதிர்ந்தது போல் தோன்றியது. ஆனால், ஒரு வலிமையான மரம் விழும்போது, அதைச் சுற்றியுள்ள பூமி அதிர்வது இயற்கையானது" என பேசியது. சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை நியாயப்படுத்துவதாக அமைந்தது.
நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரான ராஜீவ் காந்திக்கு இந்திய வரலாற்றிலேயே 48% வாக்குகள் மற்றும் 401 தொகுதிகளுடன் மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுத்தனர். 1984ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தனது 40 ஆவது வயதில் இந்தியாவின் இளம் பிரதமர் என்ற பெருமையுடன் பொறுப்பை ஏற்றார் ராஜீவ் காந்தி. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் கடைசி பிரதமர் என்ற பெருமையும் பின்னாட்களில் அவரை அறியாமலேயே அவருடன் ஒட்டிக்கொண்டது.
அரசியல் மாற்றங்கள்
பிரதமர் ராஜீவ் காந்தி தனது அரசின் முதல் நடவடிக்கையாக 1985ஆம் ஆண்டு ஜனவரியில் கட்சித் தாவல் தடை சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் இந்திய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிக்காலத்தின் போதே கட்சி மாறும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அரசு நிர்வாகத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்தை கட்டுப்படுத்தும் முயற்சி என சொல்லப்பட்டாலும், 1980களில் காங்கிரஸ் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க் கட்சிகளில் இணைந்தே ராஜீவ் காந்தி கட்சித் தவால் தடை சட்டத்தை கொண்டு வர காரணம் என்கிறார் வரலாற்றாசிரியர் மணீஷ் டெலிகிசெர்லா சாரி.
பொருளாதார மாற்றங்கள்
இந்திய பொருளாதாரம் 1991ஆம் ஆண்டில்தான் தாராளமயமாக்கப்பட்டாலும், அதற்கு முன்பே அதற்கான முயற்சிகளில் ராஜீவ் காந்தி ஈடுபட்டார். கணினி உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள், விமானம், பாதுகாப்பு, தொலைத்தொடர்பு தொடர்பான பொருட்கள் மீதான இறக்குமதியை குறைத்தார். 1990ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் லைசன்ஸ் ராஜ்ஜை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.
தொழில்நுட்ப மாற்றங்கள்
தொழில்நுட்ப இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி குடிநீர், தடுப்பூசி, கல்வி, எண்ணெய் வித்துகள், தொலைத்தொடர்புத் துறை என ஐந்து முக்கியத் துறைகளின் வளர்ச்சிக்கு இந்த அமைப்பு கவனம் செலுத்த தொடங்கியது பின்னாட்களில் பால் வளத் துறையும் இதில் சேர்க்கப்பட்டது. இந்தியாவில் தொற்றுநோய்களுக்கான தடுப்பூசிகளுக்கு வெளிநாடுகளை நம்பியே இந்தியா இருந்த நிலையில், எம்ஜிகே மேனன் தலைமையில் இந்தியாவில் உயிரி தொழில்நுட்பம் என்னும் பயோ டெக்னாஜி துறையை உருவாக்கி இந்தியாவிலேயே பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசிகள் தயாரிக்க முன்னெடுப்பு எடுக்கப்பட்டது. இன்று உலகிலேயே மிக அதிகமாக தொற்றுநோய்களுக்கான தடுப்பூசிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியதன் அடித்தளம் ராஜீவ் காலத்தில் போடப்பட்டது.
MTNL அமைப்பை உருவாக்கியதன் மூலம் இந்திய கிராமப்புறங்களில் தொலைபேசி நெட்வொர்க் உருவாக வழி வகுத்தது. 1989ஆம் ஆண்டு 0.6% ஆக இருந்த தொலைபேசி அடர்த்தி, அடுத்த 10 ஆண்டுகளில், 400% வளர்ந்து, 2.8% ஆக உயர்ந்தது. பொது இடங்கள் எங்கும் மஞ்சள் நிறப் பொதுத் தொலைபேசி மையங்கள் உருவாகி, லட்சக்கணக்கான எளியோருக்கான வாழ்வாதாரமாகவும் அது உருவானது.
கடும் எதிர்ப்பை சந்தித்த கணினி மயமாக்கம்
கணினிகளை கொண்டு நவீன இந்தியாவை கட்டமைப்பதில் அதிக கவனம் செலுத்திய ராஜீவ் காந்தி, வங்கிகள் மற்றும் ரயில்வே சேவைகளில் கணினிமயமாக்கத்தை ஊக்குவத்தார். இதற்கு கம்யூனிஸ்டுகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. 10 பேர் செய்ய வேண்டிய வேலையை கணினியே செய்துவிடும் பட்சத்தில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன.
கணினிகள் இல்லாத வங்கிகளையோ, ரயில்வே ரிசர்வேஷனையோ இன்று கற்பனை செய்வது மிக கடினம். படித்து முடித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை இன்று கணினிகள்தான் உருவாக்கி இருக்கிறது என்பதே ராஜீவ் காந்தியின் தொலைநோக்கு பார்வைக்கு உதாரணம்.
ராஜீவ் காலத்தில், அமெரிக்க நிறுவனமான 'டெக்சஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்' என்னும் நிறுவனம் பெங்களூரில் தனது ஆராய்ச்சி நிறுவனத்தைத் நிறுவத் திட்டமிட்டது. ஆனால், இந்தியாவில் இருந்தது அமெரிக்காவுக்குச் சிக்கல் இல்லாத தொலைத்தொடர்பு வசதித் தேவைப்பட்ட நிலையில் செயற்கைக்கோள் வழியாக மட்டுமே சாத்தியப்படும் என்ற நிலை; ஆனால் இதற்கு இந்தியாவின் அன்றைய தொலைத்தொடர்புச் சட்டம் அனுமதிக்கவில்லை. ராஜீவ் காந்தி அதில் தலையிட்டு, அந்நிறுவனத்துக்கான வசதியை ஏற்படுத்திக்கொடுத்தார். அதன் வழி, இந்திய மென்பொருள் தொழிலுக்கான ராஜபாட்டைக்கான அடித்தளத்தை ராஜிவ்காந்தி ஏற்படுத்தினார்.