Vanathi Srinivasan: ’கன்னிப்பேச்சு என்று சொல்லாதீர்கள்’ வானதி சீனிவாசனின் கருத்து ஏற்புடையதா அல்லது இல்லையா..?
முதல் முறை மேடை ஏறி பேசும் பேச்சு ‘கன்னிப்பேச்சு’ என வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது இதில் உள்ள ‘கன்னி’ என்ற சொல் பெண்மையை மட்டுமே குறிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது
இன்று சட்டப்பேரவையில் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனவர்கள் தங்களது கன்னிப்பேச்சான, அறிமுக உரையை நிகழ்த்தினர். அப்போது, பாஜக எம்.எல்.ஏ-வான வானதி சீனிவாசன், ’கன்னி’ என்பது இளம் வயது பெண்மையை குறிக்கும் சொல்லாக இருப்பதால், கன்னிப்பேச்சு என்பதற்கு பதிலாக தொடக்க உரை, அறிமுக பேச்சு என சொல்லலாம் என தனது கருத்தை தெரிவித்தார்.
வானதி சீனிவாசனின் இந்த கருத்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவும் அறிவித்தார். இந்நிலையில், கன்னிப்பேச்சு என்பதை மாற்றி அறிமுக பேச்சு, அல்லது தொடக்க உரை என சொல்ல வேண்டும் என்ற வானதி சீனிவாசனின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பெருவாரியான ஆதரவு எழுந்துள்ளது. அதே நேரத்தில், கன்னிப்பேச்சு என்று சொல்வதில் தவறில்லை என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், மொழி ஆய்வாளர்களிடம் கேட்டோம்.
பொது சமூகத்திடம் "கன்னி" என்பதற்கு பெண்ணுடல் மற்றும் பாலியல் தன்மை குறித்த சொல்லாடலே முதல் கருத்தாக இருக்கிறது. ஆதலால், @VanathiBJP
— ச.கருணாநிதி (@karna_sakthi) August 18, 2021
அக்காவின் கோரிக்கை நியாயமானதே!! https://t.co/1nWhWB4a4A
அ.வெண்ணிலா, எழுத்தாளர், கவிஞர் :-
வானதி சீனிவாசனின் கருத்தோடு நான் உடன்படுகிறேன். ’கன்னி’ என்ற சொல் பொதுவாக பெண்மையை நோக்கியதாகவே இருக்கிறது. இதேபோல பல சொற்கள் பெண்களுக்கான பிரத்யேக அடையாளமாக உள்ளன. நிச்சயமாக இதனை மாற்ற வேண்டும். நம்முடைய நவீன சிந்தனைகளுக்கு ஏற்ப நமது மொழியில் உள்ள சொற்களையும் நாம் மாற்ற முயற்சிக்க வேண்டும்.
சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கக் கூடிய அகராதியில் கூட ’கன்னி’ என்பதற்கு பிரதான அர்த்தமாக குமரி, கன்னித்தன்மை போன்றவற்றைதான் கொடுத்திருக்கிறார்கள். பொருள் பொதுவாக இருந்தாலும் கூட பொதுபுத்தியில் இந்த சொல் என்ன மாதிரியாக பதிவாகி இருக்கிறது என்பதைதான் நாம் முக்கியமாக பார்க்க வேண்டும். எனவே, கன்னி என்பது பெண்ணோடு தொடர்புடைய ஒரு சொல்லாக இருப்பதால் இதனை தவிர்த்துவிட்டு வேறு ஒரு சொல்லை பயன்படுத்தலாம்.
புலவர் செந்தழை கவுதமன், திராவிட இயக்க ஆய்வாளர்
பேச்சு வழக்கில் காய் கனியாகி இருக்கும் தருணத்தை நாம் என்ன சொல்வோம் பழம் ‘கன்னிப்போச்சு’ என்போம். அதேபோல், கன்னிப்பேச்சு என்றால் இங்கு பழுத்துவிட்டோம் அதாவது பக்குமடைந்துவிட்டோம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். கன்னிப்பேச்சு என்பது பக்குவமடைந்ததுடைய தொடக்க பேச்சு. வானதி சீனிவாசன் இதே சொல் வடமொழியில் இருந்திருந்தால் வரவேற்றிருப்பார். அவருடைய எண்ணத்தில்தான் இது தவறாக படுகிறது. நமது மொழியின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் வரலாறு இருக்கிறது. அந்த வரலாறை அழிப்பதுதான் அந்த கூட்டத்தின் நோக்கம். இதற்கு நாம் இரையாகிவிடக்கூடாது.
கவிதா முரளிதரன், பத்திரிகையாளர்கள்
வானதி சீனிவாசன் கருத்தில் நானும் முழுமையாக உடன்படுகிறேன். ’கன்னி’ என்பது பெண்மையை குறிப்பதாகதான் இருக்கிறது. அதேபோல், இது தமிழ் சொல்லும் அல்ல ஆங்கிலத்தில் இருந்து வந்தது. கன்னிப்பேச்சு என்பது மிக மோசமான சொல்லாடலாகதான் நான் பார்க்கிறேன். சமூகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பல சொற்களின் பெயரை நாம் மாற்றிக்கொண்டிருப்பதைபோல, இந்த கன்னிப்பேச்சு என்ற சொல்லாடலையும் மாற்றியாக வேண்டும்.
கவிஞர் மகுடேஸ்வரன்
இதை விரிவாக ஆராய்ந்து எழுத வேண்டியிருக்கிறது. ஆனால், ’கன்னிப்பேச்சு’ என்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. கன்னிப்பேச்சு என்பது முதல்முறையாக மேடையேறி நிகழ்த்தக்கூடிய பேச்சு. இதில் என்ன தவறு இருப்பதாக நினைக்கின்றார்கள் என தெரியவில்லை. ஒரு சொல் இருந்தால் அதற்கு மரபு தொடர் இருக்கும், மொழிவழியாக, உருவக்கப்படுத்தி அந்த சொல் சொல்லக்கூடியதாக இருக்கும். கன்னி என்றால் பெண்ணின் இளம் பருவத்தை குறிப்பதாக பொருள்கொள்ளும் விதமே இறுதியானது என சொல்லிவிடமுடியாது. அதனால் இந்த இடத்தில் கன்னிப்பேச்சு என்பதை பெண்மையை தொடர்புபடுத்தி கருத வேண்டியதில்லை.
கவிஞர் சல்மா
வானதி சீனிவாசன் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். கன்னிப்பேச்சில் பெண்மையை இழுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. கன்னிப்பேச்சு என்ற வார்த்தை பிரோயகத்தில் தவறு ஏதுமில்லை. முதல்முறையாக வேட்டைக்கு செல்வதை கன்னிவேட்டைக்கு செல்வதாகவே குறிப்பிடுவர். எனவே கன்னி என்பதற்கு இங்கு நாம் அர்த்தம் கொள்ளவேண்டியது முதல், தொடக்கம் என்பதைதானே தவிர, பெண்மையை அல்ல.
கண்ணபிரான் ரவிசங்கர், எழுத்தாளர்
கன்னிப் பேச்சு= இளம் பேச்சு!
— KRS | கரச (@kryes) August 18, 2021
அதில், பெண்மை இழிவு ஒன்றுமில்லை!
வேண்டுமானால்..
’கன்யா’ குமரி என்பதை மாற்றச் சொல்க!
அதான் சம்ஸ்கிருதப் பெண்மை அசிங்கம்!
கன்யா (कन्या) குமாரி/ கன்னியாகுமரி
எ. எழுதவே எழுதாதீர்!
குமரி முனை/ தென் குமரி
என்றே நல்ல தமிழ் எழுதுக!https://t.co/46NDJe2FhR pic.twitter.com/1KGe3Y5O6i
கன்னிப் பேச்சு= இளம் பேச்சு! அதில், பெண்மை இழிவு ஒன்றுமில்லை! வேண்டுமானால்.. ’கன்யா’ குமரி என்பதை மாற்றச் சொல்க! அதான் சம்ஸ்கிருதப் பெண்மை அசிங்கம்! கன்யா (कन्या) குமாரி/ கன்னியாகுமரி எ. எழுதவே எழுதாதீர்! குமரி முனை/ தென் குமரி என்றே நல்ல தமிழ் எழுதுக!
கன்னி= Virgin எ. பொருள் அல்ல! அது கன்யா/ कन्या எ. Sanskrit Parasite! தமிழில் கன்னி= உறுதி/இளமை எ. பொருள்! *கன்னி விடியல் கணைகால் ஆம்பல்= சங்கத் தமிழ் (ஐங்குறுநூறு) *கன்னி நன்மா மதில்= ஆழ்வார் அருளிச்செயல் கன்னிப் பேச்சு= இளம்/உறுதிப் பேச்சு! Maiden Speech எ. மொழியாக்கம் அல்ல!