அடித்துக் கொள்ளும் ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள்.. மாம்பழ சின்னத்துக்கே சிக்கல் வந்துடுமோ?
அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்குவதாக அறிவித்துள்ள நிலையில், ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களிலும், நேரிலும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சியை தக்க வைக்கவும், அதிமுக இழந்த ஆட்சியைப் பிடிக்கவும், அவர்களுக்கு போட்டியாக நாம் தமிழர் மற்றும் தவெக மற்றொரு பக்கமும் களத்தில் இறங்கியுள்ளனர்.
தந்தை - மகன் சண்டை:
இந்த கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் அமர கூட்டணி கட்சிகளின் பங்கு என்பது மிக மிக முக்கியம் ஆகும். அந்த வகையில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக திகழும் கட்சி பாமக. குறிப்பாக, வட தமிழ்நாட்டில் பாமக-வின் வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் உள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே புகைச்சலில் இருந்து வந்த ராமதாஸ் - அன்புமணி மோதல் தற்போது உச்சத்திற்கு சென்றுள்ளது,
அன்புமணியை தனது கட்டுப்பாட்டின் கீழ் முழுவதும் கொண்டு வர முடிவு செய்த ராமதாஸின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். இதனால், தந்தை - மகன் சேர்ந்து விடுவார்கள் என்று காத்திருந்த பாமக தொண்டர்களுக்கு வேதனையை உண்டாக்கியுள்ளது.
அடித்துக் கொள்ளும் ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள்:
இந்த சூழலில், வரும் 17ம் தேதி விழுப்புரத்தில் உள்ள வன்னியர் சங்கத்திற்கு அன்புமணி வருகை தர உள்ள நிலையில், அன்புமணியின் வருகையை எதிர்க்கும் வகையில் ராமதாஸ் ஆதரவாளர்கள் வன்னியர் சங்கத்திற்கு பூட்டு போட்டனர். இதனால், வன்னியர் சங்க அலுவலக வளாகத்தில் ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும், அன்புமணி ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது. பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

கட்சி விதிப்படி அன்புமணிக்கு ஏராளமான அதிகாரம் இருந்தாலும், பாமக-வை உருவாக்கி அதை அரை நூற்றாண்டுகளாக காப்பாற்றியவர் என்ற வகையில் ராமதாஸிற்கு மிகப்பெரிய அளவு வன்னிய சமுதாயம் மற்றும் பாமக அடிமட்ட தொண்டர்களிடம் செல்வாக்கு உள்ளது.
சின்னத்திற்கே சிக்கலா?
இதனால், தேர்தல் நெருங்கும் சமயத்தில் ராமதாஸ் - அன்புமணியும் எதிரெதிர் அணியாக இருந்தால் பாமக-வின் அதிகாரப்பூர்வமான மாம்பழம் சின்னம் யாருக்கு கிடைக்கும்? ஒருவேளை கிடைக்காவிட்டால் புது சின்னத்தில் இரு தரப்பினரும் எதிரெதிர் அணியில் போட்டியிடுவார்களா? அல்லது ஒரு தரப்பினருக்கு மட்டும் மாம்பழம் சின்னம் கிடைத்தால் அதை மற்றொரு தரப்பினர் எதிர்ப்பார்களா? என்ற பல கேள்விகள் தற்போது பாமக-விற்குள் எழுந்துள்ளது.
பாமக பிரிந்து நிற்பதால் இருவரும் தனித்தனியாக எதிரெதிர் அணிக்கு கூட்டணிக்குச் சென்றாலும், கூட்டணிக்கு தலைமை தாங்கும் அணிக்கும் பெரியளவில் பலன் இருக்காது என்றே அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதனால், பாமக-வை தங்கள் பக்கம் இழுக்க தூண்டும் கட்சியினரும் ராமதாஸ் - அன்புமணி இணைந்த பாமக-வாகவே வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் மல்லுகட்டு:

மேலும், தற்போது ராமதாஸ் - அன்புமணி மோதல் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையிலும், அன்புமணியை தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளுங்கள் என்று ராமதாஸ் கூறியிருப்பதும் இவர்கள் இணைவதற்கான வாய்ப்பை பன்மடங்கு சிக்கலாகியுள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மல்லுகட்டி வரும் நிலையில், பொது இடங்களிலும் சண்டையிட்டுக் கொள்வது அதிகரித்து வருகிறது.





















