Rajinkanth Fans: அவர்தான் வரலை... இவர்களை இழுப்போம்; அட்டகாச அரசியல் செய்யும் அண்ணாமலை
அவர்தான் வரலை... இவர்களை இழுப்போம் என்று துல்லியமாக வலை வீசி ரஜினி ரசிகர்களை வளைத்து வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அவரது வலையில் ரஜினி ரசிகர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பாஜகவை வலுவாக காலூன்ற செய்ய வேண்டும் என்று அசைன்மெண்ட்டில் தீவிரமாக களம் இறங்கி உள்ளாராம் மாநில தலைவர் அண்ணாமலை. இதற்கு அவர் ஸ்டெப் பை ஸ்டெப்பாக அவர் போடும் திட்டங்கள் வெற்றியை தேடி தருகிறது. அந்த வகையில் “அண்ணாமலை ரசிகர்களை” அலேக்காக தூக்கியுள்ளார். தஞ்சாவூரில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று ரஜினி ரசிகர்கள் பாஜவில் இணைகின்றனர்.
அவர் வருவார்... புது அரசியல் தருவார் என்று எங்க “அண்ணாமலை”யை எதிர்பார்த்து காத்திருந்து... காத்திருந்து காலங்கள் கடந்தது. வந்துட்டேன்னு சொல்லு என்று சொன்னவர்... பல்டி அடித்து வரலைன்னு சொல்லு என்று சொல்லிட்டார். இதனால் காற்று போன பலூன் போல் இருந்த எங்களுக்கு ஹைட்ரஜன் காற்றை நிரப்பி நீங்க எதிர்பார்த்த ஆன்மீக அரசியல் உங்களுக்காக காத்திருக்கிறது என்று கரம் நீட்டினார் இந்த அண்ணாமலை. அதனால் அவரை நம்பி அரசியல் களத்தில் அட்டகாசமாக இறங்குகிறோம் என்கின்றனர் தஞ்சையை சேர்ந்த ரஜினி ரசிகர்கள்.
ரஜினிக்கிட்ட எதிர்பார்த்த அரசியல் பா.ஜ.கவில் இருக்கும் என்று உறுதி கூறினார் அண்ணாமலை. இது எங்களுக்கு பிடித்திருந்தது. இதோ இணைகிறோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ரஜினி ரசிகர்கள் இரண்டாயிரம் பேர் இன்று பாஜவில் சேர்கின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் போர்க்களத்துக்கு தயாராகுங்கள் என்று ரசிகர்களை உசுப்பேற்றினார். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று உரக்க குரல் கொடுத்தார். இதற்குதானே காத்திருந்தோம் என்று பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ரஜினி ரசிகர் மன்றமாக இருந்த தன் அமைப்பை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். இந்நிலையில் பா.ஜ.கவின் பி டீம் ரஜினி என பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்டவர்களால் விமர்சனம் செய்யப்பட்டது.
கொரோனா பரவல், உடல் நிலை என பலவற்றை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை என ரஜினி மன்ற மாவட்ட செயலாளர்களை அழைத்து அறிவித்தார் ரஜினி. அவரது அரசியலிலிருந்து பின் வாங்கிய அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. பெரிய அளவில் எதிர்பார்த்தவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளானார்கள்.
சட்டமன்ற தேர்தலும் முடிந்தது...திமுகவும் ஆட்சிக்கு வந்து விட்டது. இருந்தாலும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அமைதி காத்து வந்தனர். அப்போதுதான் பாஜக தலைவர் அண்ணாமலையின் பார்வை ரஜினி ரசிகர்கள் பக்கம் திரும்பியது. அவர்கிட்ட என்ன எதிர்பார்த்தீங்களோ... அது இங்கு இருக்கு என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் உறுதி ரஜினி ரசிகர்களை இழுத்து வந்துள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள், தஞ்சாவூர் மாவட்ட செயலாலர் ரஜினி கணேசன் தலைமையில், அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இன்று இணைகின்றனர். பா.ஜ.கவில் இணைவதற்கு ரஜினி ரசிகர்கள் அவரிடம் ஒப்புதல் கேட்ட நிலையில் ரஜினியும் பச்சைக்கொடி காட்டி விட்டாராம். அதன் அடிப்படையிலேயே பல மாவட்ட நிர்வாகிகள் பா.ஜ.கவில் இணைகின்றனராம். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருவார் என எங்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த 2017ல் நான் அரசியலுக்கு வருகிறேன். 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். பூத் கமிட்டிகளை அமைக்கவும் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. தலைவர் ரஜினி சொன்னது நாங்களும் தேர்தல் போருக்கு தயாரானோம். ஆனால் வரலை... இனி அரசியல் கிடையாது என்று அறிவித்தார். மக்கள் மன்றமாக இருந்த தனது ரசிகர்கள் அமைப்பை மீண்டும் ரசிகர் மன்றமாக மாற்றினார். இதுவும் எங்களுக்கு பழகி போனது என்பதால் வழக்கம் போல் ரஜினி சொன்னதை ஏற்று கொண்ட நாங்கள் அரசியல் உள்ளிட்ட எதிலும் தலையிடாமல் அமைதி காத்தோம்.
ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு ரசிகர்கள் எந்தெந்த கட்சியில் இருந்தார்களோ அந்த கட்சியிலிருந்து விலகினர். எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்த நிலையில் பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு. முருகானந்தம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரிடம் உங்களுக்கான அங்கீகாரம் கொடுக்கப்படும் பா.ஜ.கவுக்கு வாங்க சிறப்பாக செயல்படலாம் என தொடர்ந்து பேசி வந்தார். தேசியக் கட்சி, இந்தியர்கள் அனைவரும் இந்துக்களே என்ற பா.ஜ.க கொள்கை எங்களுக்கு பிடித்து இருந்தது.
பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலையின் ஆளுமை சிறப்பாக உள்ளது. இதை மனதில் வைத்து பா.ஜ.கவில் இணைகின்றோம். ரஜினி தரப்பிற்கும் இதை தெரிவித்தோம். ரசிகர் மன்றமாக இருந்த போது எப்படி பல அரசியல் கட்சிகளில் இருந்தோமோ அதே போல் இப்போது பா.ஜ.கவில் இணைகிறோம் என்றனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ரஜினி.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த 14 ஒன்றியங்கள், இரண்டு மாநகரம், ஒரு நகரம் மற்றும் உறுப்பினர்கள் மொத்தம் 1,000 பேர், கோவை, கடலூர், விருதுநகர், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் என் தலைமையில் இன்று தஞ்சாவூரில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இணைகிறோம்.
அரசியல் என்பது வேறு, ரசிகர் மன்றம் என்பது வேறு. தலைவர் ரஜினி மீது நாங்கள் வைத்துள்ள பற்று, பாசம் எப்போதும் துளி கூட குறையாது. நிர்வாகிகளுக்கு சுயமரியாதை, தன்மானம், சுதந்திரம் போன்றவற்றை கொடுக்கும் கட்சியாகவும் திகழ்ந்து வரும் பா.ஜ.கவுடன் எங்களுக்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. பா.ஜ.கவில் இணையும் நாங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைப்போம் என்றார்.
அட்டகாசமாக அண்ணாமலை போடும் திட்டங்கள் சிறப்பாக வெற்றியடைந்து வருகிறது. இது சும்மா டிரெய்லர்தான். இனிமேல் தான் இருக்கு மெயின் பிக்சர். தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களை சிந்தாமல் சிதறாமல் பாஜவில் இணைப்பதுதான் இப்போது செம டார்கெட் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்