Rahul Guarantee: "ஆகஸ்ட் 15-க்குள் 30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரம்பும்" : ராகுல் காந்தி அதிரடி..
Rahul Guarantee: இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால், சுதந்திர தினத்திற்குள் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
Rahul Guarantee: நாட்டின் எதிர்காலத்தின் தீர்மானிக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. ஏற்கனவே, மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வரும் 13-ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
எதிர்பார்ப்பை எகிற வைத்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கை:
முதல் மூன்று கட்டங்களில் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. வரும் 13-ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா உள்பட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 30 லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழலில், சுதந்திர தினத்திற்குள் அந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ மெசேஜில், "நாட்டின் இளைஞர்களே!
ராகுல் காந்தி அதிரடி..
நரேந்திர மோடியின் கைகளில் இருந்து தேர்தல் நழுவிக் கொண்டிருக்கிறது. அவர் இந்தியாவின் பிரதமராக மாட்டார். அடுத்த நான்கைந்து நாட்களில் உங்களுடைய கவனத்தை திசை திருப்பி உங்கள் கோபத்தை தூண்ட ஏதாவது நாடகம் நடத்துவார்.
View this post on Instagram
உங்கள் கவனம் சிதறி விடக்கூடாது. வேலையின்மை மிக முக்கியமான பிரச்னை. நரேந்திர மோடி இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என்று பொய் சொன்னார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான ஜிஎஸ்டி வரிக் கொள்கையை அமல்படுத்தினார்.
நாட்டின் அனைத்து வேலைகளையும் அதானி போன்றவர்களுக்கே கொடுத்தார். நாங்கள் வேலை உத்தரவாத திட்டத்தை கொண்டு வருகிறோம். வரும் ஜூன் நான்காம் தேதி இந்தியா கூட்டணியின் அரசாங்கம் அமைய உள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள், 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் பணிகள் தொடங்கிவிடும்" என பேசியுள்ளார்.