Rahul Gandhi Future: அஸ்தமனமாகிறதா ராகுல் காந்தியின் தேர்தல் அரசியல்! இப்படி ஆச்சினா 8 ஆண்டுகள் போட்டியிட முடியாது!
அவதூறு வழக்கின் தீர்ப்பால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் அரசியல் வாழ்க்கையே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் தீர்ப்பால், அவரது தேர்தல் அரசியல் வாழ்க்கையே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை:
தேர்தல் பரப்புரையின் போது குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக, ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணையின் முடிவில், அவர் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேநேரம், ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கியதோடு, மேல்முறையீடு செய்ய அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பின் காரணமாக வயநாடு தொகுதியின் எம். பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்து என்ன?
இதனிடையே, தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து அதற்கு தடை பெற ராகுல் காந்திக்கு ஒரு மாதம் மட்டுமே கால அவகாசம் உள்ளது. அதற்குள் தண்டனைக்கு தடை பெறாவிட்டால் ராகுல் காந்தி சிறையில் அடைக்கப்படுவார். இதனால், அவரது தேர்தல் அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமாக வாய்ப்புள்ளது.
2024 தேர்தலில் போட்டியிட முடியாத சூழல்:
ஒருவேளை தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால், ராகுல் காந்தியால் 8 ஆண்டுகள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. அதாவது, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை போக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (ஆர்பிஏ) பிரிவு 8-ன்படி, அடுத்த 6 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் போட்டியிட முடியாத சூழல் உருவாகும். மேலும் தற்போது 52 வயதாகும் ராகுல் காந்தி 8 ஆண்டுகால தடை முடிவடையும் போது 60 வயதை எட்டியிருப்பார்.
ராகுல் காந்தியிடம் உள்ள வாய்ப்புகள் என்ன?
இதனிடையே, ராகுல் காந்திக்கு எதிரான வழக்கின் மேல் விசாரணைக்கு முறையிட, சட்ட வல்லுநர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இரண்டு கோரிக்கைகளை நீதிமன்றங்களில் முறையிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதலாவது என்பது, செஷன்ஸ் நீதிமன்றத்திலேயே தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வது. இரண்டாவது, ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்தும், வயநாடு தொகுதிக்கு இடைதேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கவும் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்படும் என கூறப்படுகிறது.
குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லையா?
ராகுல் காந்தி தரப்பிலான மூத்த வழக்கறிஞரான அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களை சந்தித்தபோது, ”நாடாளுமன்ற உறுப்பினரின் தகுதிநீக்கம் என்பது அரசியலமைப்பின் 103 வது பிரிவின்படி, குடியரசு தலைவரால் முடிவு செய்யப்பட வேண்டும். ஆனால், ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பான அறிவிப்பில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை. எனவே இந்த தகுதி நீக்க நடவடிக்கை என்பது சட்டவிரோதமானது” என கூறினார்.