விடியலுக்காக காத்திருக்கிறோம்... விடியலுக்கு வெகுதூரமில்லை! - மருத்துவர் ராமதாஸ்
6 மாதத்தில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீட்டிற்காந சட்டம் விரைவில் கொண்டு வருவார்கள் - அன்புமணி ராமதாஸ்
புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,‘‘2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்’’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் இறப்பிற்கு பாமக பொதுக்குழு அஞ்சலி செலுத்தினர்.
மருத்துவர் ராமதாஸ் எழுதிய அரசியல் ஆத்திசூடி வெளியீடு:
- அமாவாசையும், பவுர்ணமியும் கட்சியின் செயற்குழு கூட்டத்தால் நிறையட்டும்!
- அரசாங்கம் போல் உழைத்தால் அரசாங்கம் நிச்சயம்!
- அனைவரும் சமமே!
- அனைத்து சமுதாயங்களுக்கும் உரிய இடப்பங்கீட்டை பெறுவதே நமது கொள்கை!
- ஆக்கப்பூர்வமாக கட்சிப் பணி செய்!
- ஆட்சியமைப்பதே இலக்கு.... அதை நோக்கியே நமது உழைப்பு!
- இன்றே செய்... நாளைக்கு ஒத்திவைக்காதே!
- உடற்பயிற்சி செய்... உடலையும், மனதையும் புத்துணர்வுடன் வைத்திரு!
- ‘‘உயிரைத் தருகிறோம்... தமிழைத் தா’’ என்று முழங்கியவர்களில் பலர் மறைந்து விட்டனர்... ஆனால், தமிழ் தான் இல்லை!
- உழைத்தால் மட்டுமே உயர்வு... சோம்பித் திரிந்தால் தாழ்வு!
- உழைப்பே உன்பெயர் தான் ஜி.கே. மணியா?
- உழைப்பே எங்கள் மூலதனம்!
- உன் ஊரில் ஒரு பிரச்சினை என்றால், முதல் ஆளாக சென்று உதவி செய்!
- உன்னால் முடியாதது எதுவும் இல்லை!
- ஊக்கப்படுத்து... உனக்கு கீழ் உள்ளவர்களை!
- எல்லோரிடமும் நட்பு கொள்!
- ஏணியாய் இருந்தவர்களை எட்டி உதைக்காதே!
- ஒவ்வொரு ஊரிலும் கட்சிக்கு பெயர்ப்பலகை திற... ஒவ்வொரு தெருவிலும் கொடி ஏற்று!
- ஒன்றுபட்டு கட்சிக்காக உழை!
- ஓட்டுக்களைச் சேர்... கட்சிக்காக!
- கட்சிப் பணிகளில் பிள்ளையாராக இருக்காதே...முருகனாய் இரு!
- கண்ணாடி முன் பயிற்சி கட்சியை வளர்க்கும்!
- காலம் கனிந்திருக்கிறது... காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!
- காலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்!
- காழ்ப்புணர்ச்சிக் கொள்ளாதே!
- குடும்பத்திற்காக சிறிது நேரத்தை செலவிடு!
- கோஷ்டி அரசியல் செய்யாதே... ஒன்றுபட்டு கட்சிப் பணியாற்று!
- ச.மூ.ச சமூகத்தை உயர்த்தும்!
- சுலபமாய் வெற்றி கிடைக்காது... கடுமையாக உழைக்க கற்றுக் கொள்!
- சோம்பல் என்பது எங்கள் கட்சியில் இல்லை!
- நீ ஒருவன் தான்.... ஆனால், உன்னால் 1000 ஓட்டு நிச்சயம்!
- தமிழைத் தேடி அலைகின்றோம்....இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை!
- தாய் வளர்த்து நாம் வளர்ந்தோம்... தமிழ் வளர்த்து நாம் வாழ்வோம்!
- தினமும் 10 பேரிடம் பாமகவின் சாதனைகளையும், கொள்கைகளையும் சொல்; அவர்களில் குறைந்தபட்சம் ஒருவரை கட்சியில் உறுப்பினராக சேர்!
- பா.ம.க.வின் கொள்கைகளே.... ப(கடைபி)டிக்கப்பட வேண்டிய கொள்கைகள்!
- பெண் குழந்தைகளை பெண் குழந்தைகள் என்று சொல்லாதீர்கள்... பெண் தெய்வங்கள் என்று சொல்லுங்கள்!
- பெண் குழந்தைகளை பெண் தெய்வங்களாக மதித்து வளர்ப்போம்!
- மக்களை சந்தி... அவர்களின் மனங்களை வெல்!
- மகளிருக்கு மரியாதை கொடு.... அவர்களை தெய்வமாக வணங்கு!
- மண்ணுக்கும், மனிதருக்கும் தீங்கு செய்ய எவரேனும் முயன்றால் அதை முறியடிக்க போராடு!
- மரம் வளர்க்கும் அறமே, மாபெரும் அறம்!
- மரம் வளர்ப்பதை முதன்மைக் கடமையாகக் கொள். பிறந்தநாளுக்கும், திருமண நாளுக்கும் தவறாமல் மரக்கன்று நடு!
- முடியாது என்ற சொல் எங்கள் அகராதியில் இல்லை!
- வன்னியர்களின் முன்னேற்றத்திற்கான நன்மருந்து 10.5% இடஒதுக்கீடு!
- விடியலுக்காக காத்திருக்கிறோம்... விடியலுக்கு வெகுதூரமில்லை!
அன்புமணி ராமதாஸ் பேச்சு:
2023-ம் ஆண்டுக்கான செயல் திட்டங்களுக்கு ஐயா வழி வகுப்பார். செயல்திட்டங்களை அனைத்தையும் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. பிரசாந்த் கிஷோர் பல மாநிலங்களில் ஆட்சி அமைய வழிவகுத்துள்ளார். அதே போல் புதுச்சேரியில் அவர் ஆய்வு நடத்தியபோது அதிக இளைஞர்கள் கொண்ட கட்சியாக பாமக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இளைஞர்களால் தான் பாமக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆட்சிக்கு வரவில்லை, ஆட்சி அதிகாரத்திற்கு வரவில்லை. ஆனால் ஐயா தலைமையில் மக்களுக்காக பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். இன்னும் 6 மாதத்தில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக சட்டம் விரைவில் கொண்டு வருவார்கள். மே மாதம் 5 ஆம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று வன்னியர் சங்க மாநாடு நடைபெறும் எனத் தெரிவித்தார்.
பொதுக்குழு தீர்மானங்கள்:
தீர்மானம் 1: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மத்தியிலும், மாநிலத்திலும் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தீர்மானம் 2: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்!
தீர்மானம் 3: தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும்!
தீர்மானம் 4: நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக 25,000 ஏக்கர் விளைநிலங்களை பறிப்பதை தமிழக அரசும், என்.எல்.சி. நிறுவனமும் உடனடியாக கைவிட வேண்டும்!
தீர்மானம் 5: தமிழ்நாட்டில் தனியார் வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்ய உடனடியாக சட்டம் இயற்றவேண்டும்.
தீர்மானம் 6: அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!
தீர்மானம் 7: சோழர் பாசனத் திட்டம், தருமபுரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்- ரூ. 1 லட்சம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்!
தீர்மானம் 8: மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது!
தீர்மானம் 9: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்!
தீர்மானம் 10: கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து போதையில்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தீர்மானம் 11: தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!
தீர்மானம் 12: அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
தீர்மானம் 13: அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்!
தீர்மானம் 14: தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஓர் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; ஒரு லட்சம் ஆசிரியர்களை புதிதாக நியமிக்க வேண்டும்!
தீர்மானம் 15: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்!
தீர்மானம் 16: சிங்களப் படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், கைது செய்யப் படுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்!
தீர்மானம் 17: சென்னையில் எஞ்சியுள்ள மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் ஒரு மாதத்திற்குள் சீரமைக்க வேண்டும்!
தீர்மானம் 18: புதுவையில் பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18% இட ஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால் பா.ம.க. சார்பில் மாபெரும் போராட்டம்!
தீர்மானம் 19: புதுவையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்!
தீர்மானம் 20: 2023ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியில் கட்சி சாராத இளைஞர்களை சேர்ப்பதற்கான சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்!