பாமக-வில் பரபரப்பு! ஜி.கே.மணி-யை நீக்க அன்புமணி அதிரடி! பின்னணி என்ன?
PMK: "பாமகவின் கௌரவ தலைவர் ஜி.கேமணியை கட்சியை விட்டு ஏன் நீக்க கூடாது என பாமக தலைமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது"

அடிப்படை உறுப்பினரிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கக் கோரி ஜி.கே.மணிக்கு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அன்புமணி தரப்பிலிருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அன்புமணி
இதுகுறித்து பாமகவின் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்.
அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லைக் கடந்தவையாக இருப்பதால், அதற்காக அவர் மீது கட்சியின் அமைப்பு விதி 30 இன்படி நடவடிக்கை எடுப்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் நேற்று (17.12.2025) புதன் கிழமை கூடி விவாதித்தது. அப்போது ஜி.கே.மணி அவர்களின் கீழ்க்கண்ட இரு கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்டது.
1. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த திசம்பர் 6 ஆம் தேதி தில்லி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்தது மற்றும் நேர்காணல் அளித்தது.
2. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் கடந்த திசம்பர் 15 ஆம் நாள் சென்னையில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தது.
மேற்கண்ட இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பாமக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி ஆதரவாளர்கள் இந்த அறிவிப்புக்கு ஆதரவாக கருத்துருக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பின்னணி காரணம் என்ன ?
இதுகுறித்து பாமக நிர்வாகிகளிலும் தொடர்பு கொண்டு விசாரித்த போது: " பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கடி பிரச்சினை நிலவி வந்தாலும், மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் அன்புமணியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அபத்தமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் மட்டுமில்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பின் போதும், அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இவை அனைத்திற்கும் பாமக தலைவர் அன்புமணி மௌனமாக இருந்து வருகிறார்.
இதற்கெல்லாம் பின்னணியில் ஜி.கே.மணி இருந்து வந்தார். ஜி.கே. மணியின் தொடர்ந்து, அன்புமணியின் மீது அவதூறு கருத்துக்களை பரப்பி வந்தாலும், இவ்வளவு ஆண்டுகள் கட்சியில் இருந்தார் என்பதற்காக அவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டு வந்தது. இனியும் அவர் தனது போக்கின் மாற்றிக்கொள்ளவில்லை என்றால், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். கட்சி மற்றும் சின்னம் ஆகியவை அன்புமணியிடம் தான் இருக்கிறது. எனவே அன்புமணி பின்னால் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் இருப்பார்கள் என தெரிவித்தனர்.





















