‛தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பாஜக நடத்தும்’ -கருப்பு முருகானந்தம் பேட்டி!
பள்ளி, கல்லூரி, டாஸ்மாக் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி தின ஊர்வலங்களுக்கு மட்டும் தடை விதிப்பது ஏற்புடையது அல்ல- கருப்பு முருகானந்தம்
![‛தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பாஜக நடத்தும்’ -கருப்பு முருகானந்தம் பேட்டி! Plan to hold Ganesha Chaturthi procession in Tamil Nadu in violation of ban' -karuppu Muruganantham ‛தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பாஜக நடத்தும்’ -கருப்பு முருகானந்தம் பேட்டி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/03/1cf115acd151e45e3202fa5238c61c8b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த பாஜக தயாராக உள்ளது எனவும் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்காக விலையேற்றம் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 'இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்' என்ற தலைப்பிலான மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் மக்கள் நலன் சார்ந்த மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களிடையே தெரிவிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு தொண்டரும் குறைந்தபட்சம் ஐம்பது பேரையாவது சந்தித்து மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார், உள்ளாட்சி தேர்தலுக்கு நிர்வாகிகள் அனைவரையும் தயார் படுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி தேர்தலிலும் , பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதிக உறுப்பினர்களை வெற்றி பெற வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும் பெட்ரோல், டீசல் , கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம். நாட்டின் வளர்ச்சிக்காக விலையேற்றம் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளில் வைத்தே சாமியை வழிபடுவதற்கு அரசு அனுமதி தேவையில்லை. இது அரசின் சர்வாதிகார போக்கைக் காட்டுகிறது. பள்ளி, கல்லூரி, டாஸ்மாக் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி தின ஊர்வலங்களுக்கு மட்டும் தடை விதிப்பது ஏற்புடையது அல்ல. அரசு கட்டுப்பாடுகள் விதிக்கலாமே தவிர தடை விதிக்க கூடாது. தமிழகத்தில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் வளர்ச்சிக்கும்தான். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சியினர் மக்கள் மத்தியில் அவதூறு செய்தி பரப்பி வருகின்றனர். இந்த அவதூறுகளை பொதுமக்களிடம் உண்மை நிலையை எடுத்துச் சொல்லி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் விளக்குவார்கள் என்று பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)