Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!
சீமானின் ஆதரவாளரான யூட்டியூபர் சாட்டை துரைமுருகன் மீது முதல் புகாரளித்த வினோத் என்பவர் திருச்சியில் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
திருச்சி கே.கே.நகரில் உள்ள கார் பழுது நீக்கும் மைய உரிமையாளரான வினோத், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை அவதூறாக விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கண்டு கோபமடைந்த சாட்டை யூட்டியூப் சேனலை நடத்தும் துரைமுருகன் உள்ளிட்டோர், வினோத்தின் கார் பழுதுநீக்கும் நிலையத்திற்கு சென்று வினோத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவதூறு பதிவை நீக்கி, மறுப்பு பதிவை வெளியிட செய்து வினோத்தை மன்னிப்பு கேட்க வைத்து அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றி இருந்தனர்.
இதனையெடுத்து சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் தனது கார் பழுது நீக்கும் நிலையத்திற்கு வந்து தன்னை அவதூறாக மிரட்டியதாக திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் வினோத், மகிழன், சந்தோஷ், சரவணன் ஆகியோர் கடந்த 11ஆம் தேதி கைது செய்யப்பட்டு முசிறி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் திருச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நால்வருக்கும் கடந்த 15ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.
இருப்பினும் அமைச்சர் செந்தில் பாலாஜியை மணல் கடத்தோடு தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியதாக கரூர் மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி தந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் மட்டும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியை பற்றி அவதூறாக பேசிய வழக்கிலும் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய போலீசாராலும் துரைமுருகன் கைது செய்யப்பட்டிருந்தார். சாட்டை துரைமுருகன் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு வழக்கில் மட்டும் துரைமுருகனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. மற்ற இரண்டு வழக்குகளில் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்காததால் அவர் தற்போது வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் மீது முதலில் புகார் அளித்த திருச்சி கே.கே.நகர் கார் பழுது நீக்கும் நிலைய உரிமையாளர் வினோத், திமுக முதன்மை செயலாலரும், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார். அவர் திமுகவில் இணைந்துள்ளதற்கான புகைப்படத்தையும் வினோத் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் இது தொடர்பான செய்திகளுக்கு:-
#JUSTIN
சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர் திருச்சி கே.கே.நகர் காவல்துறையினர்
மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
பிரபாகரன் பற்றி அவதூறாக பதிவிட்டதாக கூறி பதிவரின் கடைக்கு சென்று, மிரட்டி வீடியோ எடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது#sattaiduraimurugan pic.twitter.com/tVqgop1v4X
">