2026ல் திமுக - தவெக இருமுனைப்போட்டி.. NDA ஆபத்தான கூட்டணி.. விஜய் - ஓபிஎஸ் இணைந்தால் பலம் கூடும்
2026 தேர்தலில் திமுகவுக்கு எதிரான கட்சியாக தவெக தான் இருக்கும் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் தவெக முக்கிய இடமாக அங்கம் வகிக்கிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இப்போதே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி முடிவான நிலையில், தவெக-வை இந்தியா கூட்டணிக்குள் கொண்டு வர பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. வெளிப்படையாகவும் இபிஎஸ் விஜய்க்கு அழைப்பு விடுத்தார். ஆனால், தவெக தலைவர் விஜய் பாஜக மற்றும் திமுகவுடன் கூட்டணி கிடையாது என்ற முடிவை அறிவித்து விட்டார்.
இருப்பினும், திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணி தேவை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் சில கட்சிகள் கூட்டணி சேர தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. பாஜக இருப்பதால் தான் இந்த தயக்கம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், NDA கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் அணியில் இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன், 2026 தேர்தலில் திமுக Vs தவெக என்ற இருமுனைப் போட்டி தான் இருக்கப் போகிறது. என்டிஏ கூட்டணி மிகவும் ஆபத்தான கூட்டணி. விஜய் - ஓபிஎஸ் சேர்ந்தால் அரசியல் நடத்த முடியும். தென்மாவட்டங்களில் விஜய்க்கு பலம் கூடும் என தெரிவித்துள்ளார். தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும். மதியாதார் வாசலை மிதிக்க மாட்டேன் என கும்பிடு போட்டு வெளியே வருவது தான் நிம்மதி என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தந்திருக்கும் நிலையில், ஓபிஎஸ் குறித்து பண்ருட்டி பேசியிருப்பது கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















