TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
TTV DHINAKARAN :ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் தொனியில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிர திட்டம்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் பேசுகையில், அரசு மருத்துவமனையில் பிரசவங்களை அதிகரிக்கும் வகையில் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த பேச்சுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமைச்சர் சர்ச்சை பேச்சு- டிடிவி
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் பேசியிருப்பது, தமிழகத் தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக மருத்துவத்துறையில் உள்ள அவலங்களை சரி செய்து மாற்றத்தைத் தருவோம் என ஆட்சிக்கு வந்த தவெக, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்தும் “மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு,
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் எலித்தொல்லை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள், கைப்பேசி வெளிச்சத்தில் சிகிச்சை உள்ளிட்ட அவலங்களை சரி செய்யாமல், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவோ, நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை வழங்கவோ எந்தவித ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பையும் எடுக்காமல், தமிழகத் தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் போதும் அவர்கள் அரசு மருத்துவமனைகளைத் தேடி வருவார்கள் என்ற தொனியில் அத்துறை அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தரமான சிகிச்சை வழங்குங்க- டிடிவி
எனவே, “ஆட்சிக்கு வந்துவிட்டோம்; மக்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம், எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்” என்ற அதிகாரத் தொனியை ஓரம்கட்டிவைத்துவிட்டு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















