பிரதமர் மோடியை எதிர்க்கும் முதன்மையான வலிமையான முதல்வர் ஸ்டாலின் தான் - கே. எஸ்.அழகிரி
மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் முதல்வர் ஸ்டாலின், இந்தியாவிலேயே பிரதமர் மோடியையும் , பாரதிய ஜனதா கட்சியும் எதிர்க்கும் முதன்மையான வலிமையான முதல்வர் ஸ்டாலின் தான் - கே.எஸ். அழகிரி
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி நெல்லையில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான செல்லபாண்டியன் பவனத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா முழுவதும் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நடைபயணத்தை தொடங்கி உள்ளது. இந்தியாவில் தற்போது நிலவும் வரலாறு காணாத விலைவாசி உயர்வு, பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கடுமையான ஜிஎஸ்டி வரி, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் ஆகியவற்றை முன்வைத்து நடைபயணம் தொடங்கியுள்ளோம். இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததில் மிக முக்கிய பங்காற்றிய அரசியல் இயக்கம் காங்கிரஸ் இயக்கம். பொது உடைமை கட்சிகளுடைய பங்கும் மகத்தானது.
ஆனால் இந்தியாவில் எங்குமே இந்த சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் ஆர்.எஸ்.எஸ்காரர்கள், சங்பரிவார்கள், ஜனசங்கம், பாஜக, இந்து முன்னணி ஆகிய எந்த பிரிவும் இந்திய சுதந்திரத்திற்காக போராடியது இல்லை. ஆனால் இன்று மோடி சுதந்திர தினத்தை பெரிய விழாவாக கொண்டாட முயற்சிக்கிறார்கள். மோடி வீட்டிற்கு வீடு தேசிய கொடியை கொடுக்கிறார். இப்போதாவது தேசியக்கொடியின் மீது அவர்களுக்கு மரியாதை இருக்கிறது என்கிற வகையில் இது எங்களுக்கு மகிழ்ச்சி தான். இது வரவேற்கத்தக்கது தான். நாங்கள் அதை எதிர்க்கவில்லை. 55 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகமான நாக்பூரில் இரண்டு முறை மட்டுமே தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஆனால் இன்று கொண்டாடுகிறார்கள். இதுவரை புறக்கணிக்க காரணம் என்ன என்று அவர்கள் விளக்க வேண்டும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலர் இருந்த போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது லிட்டர் பெட்ரோல் 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று கச்சா எண்ணெய் 60, 70, 80 ரூபாய் என்ற அளவில் விற்கும் நிலையில் மோடி அரசு 100 ரூபாயக்கு பெட்ரோலை விற்கிறது. இந்த ஒரு உதாரணமே காங்கிரஸ் கட்சிக்கு ஆளத்தெரியும், பாஜகவுக்கு பேசத்தான் தெரியும் என்பதற்கு.
பீகாரில் நிதிஷ்குமார் ராஜினாமா செய்திருப்பதால் பிரிந்த நண்பர்கள் இணைந்திருக்கிறார்கள், மகராஷ்ட்ரா போன்ற சூழல் பீகாரில் ஏற்படாது. மதசார்பற்ற அரசியல் கட்சிகளுக்கு பீகார் அரசியல் மாற்றம் முதல் வெற்றி. ஆளுனர் ரவி தனது மாளிகையில் வரம்பு மீறி மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் கூட்டங்கள் நடத்துகிறார். இது தவறான செயல் கண்டிக்கத்தக்கது. புலனாய்வுதுறை பின்புலம் உள்ள ஆளுனர் தமிழகத்திற்கு தேவையில்லை. மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் முதல்வர் ஸ்டாலின், இந்தியாவிலேயே பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா கட்சியும் எதிர்க்கும் முதன்மையான வலிமையான முதல்வர் ஸ்டாலின்தான். மின்கட்டண உயர்வுக்கு காரணம் ஒன்றிய அரசின் உதய்திட்டம்தான் காரணம். வருகிற செப்டம்பர் 7ம் தேதி தேர்தல் வெற்றியை மட்டும் முன்னிருத்தாமல் இந்திய ஜனநாயகத்தை சீர்திருத்தம் செய்யும் வகையில், பாஜக அரசை எதிர்க்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கி காஷ்மீர் வரை செல்கிறார். 148 நாட்கள் பயணத்தில் 3500 கிலோ மீட்டர் தூரம் 12 மாநிலங்கள் வழியாக செல்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக அமையும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்