Seeman on Prabhakaran Alive: "பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க.." - பொங்கிய சீமான்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் விவகாரத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், தமிழ் தேசிய தலைவர்களில் ஒருவருமான பழ. நெடுமாறன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அளித்துள்ள பேட்டியில்,
"பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பதற்கு பதில் இல்லை. ஆனால், இதுகுறித்து என்னிடம் ஒருசில கேள்விகள் மட்டுமே உள்ளது. என் தம்பி பாலசந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பிரபாகரன் தப்பி போயிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..? எந்த சூழ்நிலையிலும் இந்த நாட்டை விட்டு போக மாட்டேன் என்று சொன்னவர், வீரமாக நின்று சண்டையிட்டவர். தன் உயிரை மட்டும் தற்காத்து கொண்டு தப்பி ஓடுபவர் எங்கள் அண்ணன் கோழை என்று நீங்கள் நினைக்கிறீர்களா..?
15 ஆண்டுகள் போர் முடிந்து ஒரு பேரழிவை நாங்கள் சந்தித்த பிறகு, பத்திரமாக எங்கள் பதுங்கி இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..?
இரண்டாவது சொல்லிட்டு வருபவர் எங்கள் அண்ணன் கிடையாது. வந்துட்டுதான் சொல்வார். அவர்களை அறிந்தவர்கள் இதை நன்கு அறிவார்கள். சொல்லுக்கு முன் செயல் என்று எங்களுக்கு சொல்லி கொடுத்தவர் எங்கள் தலைவர் அவர்கள். அதனால் தேவையற்றதை கூறி குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சரி மக்கள் முன்னாடி தோன்றுவார் என்று சொல்லுகிறார்கள். சரி அவர் தோன்றட்டும் பேசுவோம்.
அய்யா பெரியாரிடம் கடவுள் இல்லை. கடவுள் இல்லை என்று சொல்லுகிறீர்கள். ஒருவேளை கடவுள் தோன்றிவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு பெரியார், தோன்றினால் அன்றிலிருந்து கடவுள் இருக்கிறார் என்று சொல்லி கொள்வோம். அதுமாதிரி நெடுமாறன் அய்யா சொல்வதுபோல் எங்கள் தலைவர் நேரில் தோன்றினால், வந்ததிலிருந்து பேசுவோம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக, பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், இது பிரபாகரன் குடும்பத்தினர் தெரிவித்த தகவல் என்றும் அவர் விரைவில் வெளியே வருவார். பிரபாகரன் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பில் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பழ. நெடுமாறன் கூறியதாவது, ”சர்வதேச அரசியல் சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்த வெடித்துச் சிதறியுள்ள சிங்கள மக்களின் போராட்டமும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை தற்போது உருவாகியுள்ளது. இந்த சூழலில் தமிழீழ தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவிற்கு எதிராக சீனா செயல்படுகிறது இதனை தடுக்க முற்பட வேண்டும். இது பிரபாகரன் குடும்பத்தினர் தெரிவித்த தகவல் என்றும் அவர் விரைவில் வெளியே வருவார். பிரபாகரன் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபாகரன் உள்ள இடத்தை தற்போது கூற முடியாது. பிரபாகரனின் அனுமதியுடன் இதனை வெளிப்படுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில், பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா..? இல்லையா? பழ. நெடுமாறன் தெரிவித்தது உண்மை தானா? என்பது குறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஏபிபி நாடு செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டறிந்தோம். அப்போது அவர் தெரிவித்ததாவது, “ பழ. நெடுமாறனின் இந்த கருத்து குறித்து அவரிடமிருந்துதான் கேட்டு தெரிய வேண்டும். அவருடைய சுயலாபத்துக்காக இந்த கருத்தை தெரிவித்து இருக்கலாம். எனக்கு தெரிந்த வகையில், பிரபாகரன் இந்த உலகத்தில் இல்லை. அப்படி அவர் இறந்து விட்டார் என்று பொய் சொல்ல இலங்கை அரங்காத்திற்கு அவசியம் இல்லை.
இதுவரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா ? என்ற கேள்வி எழவுமில்லை. அதை நிரூபிக்கம் அளவிற்கு இலங்கை அரசுக்கு தேவையும் இருந்ததும் இல்லை. இதுமாதிரியான கருத்துகள், இதுமாதிரியான செயல்பாடுகள் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எந்த மாதிரியான பயனையும் தராது. இதனால் அந்த மக்களுக்கு பாதிப்பு மட்டும் ஏற்படும்.” என்று தெரிவித்தார்.