1996-ஆம் ஆண்டு தி.மு.க. வெற்றிபெற யார் காரணம் என்று தெரியுமா? - பிரச்சாரத்தில் சரத்குமார் பேச்சு..
1996-ஆம் ஆண்டு தி.மு.க. வெற்றிபெற யார் காரணம் தெரியுமா என்று சரத்குமார் பிரச்சாரத்தில் பேசினார்.
சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஜோசப்பை ஆதரித்து மதகுபட்டி, ஒக்கூர், சிவகங்கை காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசும்போது, கமல்ஹாசன் தன் உழைப்பின் மூலம் வெற்றி பெற்றவர். அவர் ரசிகர் மன்றம் தொடங்கிய காலத்தில் இருந்தே மக்களுக்குச் சேவை செய்து வருகிறார். மேலும் மக்கள்சேவை செய்வதற்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்பதற்காக கட்சி தொடங்கி, தேர்தலில் நிற்கிறார்.
1996-ஆம் ஆண்டு திமுக-த.மா.கா கட்சிக் கூட்டணியை வெற்றிபெற செய்ததற்கு முதல் காரணம் நான்தான். அப்போது தொடர்ந்து 40 நாட்கள் பிரச்சாரம் செய்து அவர்களை வெற்றிபெறச் செய்தேன். நாங்கள் பல நல்ல திட்டங்களை வைத்துள்ளோம். இப்போது மக்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. பொருளாதாரம் உயரவில்லை. மக்களுக்குப் பணம் கொடுத்தால்போதும், வாக்கு அளித்துவிடுவார்கள் என எண்ணுகின்றனர்.
காலில் விழுந்து, கெஞ்சிக் கேட்கிறேன். வாக்களிக்க கொடுக்கும் பணத்தைத் தூக்கி எறியுங்கள். உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியும், துணிவும் வேறு எதிலும் கிடைக்காது. எதற்கெடுத்தாலும் இலவசம் என்று அறிவிக்கின்றனர். மு.க ஸ்டாலின் மகன் காவல்துறையினரை எச்சரிக்கிறார். அவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என்பதைச் சிந்தியுங்கள். எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என அவர் பேசினார்.