Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18வது முறையாக நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 18வது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் செந்தில் பாலாஜி. சட்டவிரோத பணிப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அவரை அமலாக்கத்துறை கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்தது. இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
18வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு:
புழல் சிறையில் அடைக்கப்பட்டது முதல் அவர் ஜாமினில் வெளியில் தொடர்ந்து நீதிமன்றம் மூலம் முயற்சி செய்து வருகிறார். ஆனால், அவரது ஜாமின் மனு முதன்முறை தள்ளுபடி செய்யப்பட்டு, தற்போது மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில் மீண்டும் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது அவரது நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுவது இது 18வது முறையாகும். இன்று நடைபெற்ற விசாரணைக்கு செந்தில் பாலாஜி நேரடியாக ஆஜராகவில்லை. அவர் காணொலி காட்சி மூலமாக புழல் சிறையில் இருந்தவாறு ஆஜரானார்.
ஜாமினில் வர போராடும் செந்தில் பாலாஜி:
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறையினர் கடந்தாண்டு ஆகஸ்ட் 12ம் தேதி 3 ஆயிரம் பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தி.மு.க. அரசின் அமைச்சர்களில் முக்கியமான நபராக கருதப்படும் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிறையில் இருப்பது தி.மு.க. அரசுக்கு பின்னடைவாக உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்தாண்டு கைது செய்த பிறகு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் சென்னை ஓமந்தூரரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் தன்னுடைய உடல்நலத்தை காரணம் காட்டி ஜாமின் மனு கோரியிருந்தார். ஆனாலும், உடல்நலத்தை காரணம் காட்டி அவருக்கு ஜாமின் வழங்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்துக்கள் வழிபட அனுமதி... அயோத்தி வழியில் ஞானவாபி.. நடந்தது என்ன?
மேலும் படிக்க: ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல்.. யாத்திரையில் விஷமிகள் செய்த காரியம்.. நடந்தது என்ன?