பூணூல் அணிவிக்கவா ஆளுநரை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார்கள்? அமைச்சர் பொன்முடி காட்டம்
அடுத்த முறை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் மாநிலங்களுக்கு அதிகாரமில்லாத, ஒற்றையாட்சி எற்படும்
அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் மாநிலங்களுக்கு அதிகாரமில்லாத, ஒற்றையாட்சி எற்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு என்கிற தலைப்பில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள், மதிமுக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
’’இந்தியாவில் உள்ள மாநிலங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து ஒரு மத்திய அரசை உருவாக்கி உள்ளது. இந்தியாவை ஒரு மதச்சார்பு உள்ள நாடாக உருவாக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவின்போது கூறப்பட்ட நிலையில் அவற்றை தவிர்க்க வேண்டும் என அம்பேத்கர் எடுத்துக் கூறி, இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக அறிவித்தார். இதை மாற்ற வேண்டுமென மத்தியில் உள்ள பிஜேபி முயற்சி செய்து வருகிறது.
அடுத்த முறை பிஜேபி வெற்றி பெற்றுஆட்சிக்கு வந்தால் மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லாத, ஒற்றை ஆட்சி முறை வந்துவிடும். இதனை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மதச்சார்பின்மை என்பது பிஜேபிக்கு பிடிக்காது. இந்தியாவை ஒரு மதச்சார்புள்ள நாடாக, ஒரு இந்து நாடாக மாற்ற முயற்சி செய்து பாரத் என்ற பெயரை கூறி வருகிறது.
இன்றைக்குள்ள இந்த சூழலில் அரசியலமைப்பின் அடிப்படை நோக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. பொருளாதார சமத்துவமும், சமூக சமத்துவமும் இணைந்து வளர்கிற போதுதான் ஒரு சமூகம் முன்னேறும். ஆனால் பிஜேபி இங்கு மதவெறியை தூண்டிவிட்டு ஆட்சி செய்யவும், அரசியல் செய்யவும் பார்க்கிறது.
கவர்னர் அரசியல் பேசி வருகிறார். கவர்னர் என்பவர் நியமிக்கப்பட்ட ஒருவர். உண்மையான அதிகாரம் என்பது ஆளுநரிடம் இல்லை, அமைச்சரவையிடம்தான் அதிகாரம் உள்ளது. அமைச்சரவை என்ன சொல்கிறதோ அதைக்கேட்டு நடப்பவர்தான் ஆளுநர். ஆனால் ஆளுநர் அனைத்தும் தான் என்பது போல் பேசி வருகிறார். கடந்த வாரம் நந்தனார் பிறந்த ஊருக்குச் சென்று அனைவரையும் கூட்டி பூணூல் அணிவித்தார். ஆளுநர் செய்யும் வேலையா இது? பூணூல் போடுவதற்காக ஆளுநரான உங்களை தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என காட்டமாக பேசினார். தமிழ்நாட்டில் திருவள்ளுருக்கு பூணூல் அறிவித்து பார்த்தார்கள். ஆனால் அது எடுபடவில்லை.
ஆளுநர் தமிழ்நாட்டில் சமூக நீதியில்லை என்றும், சாதிய ஏற்றத்தாவு இருக்கிறது எனவும் கூறுகிறார். ஒரு ஊரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பதவியேற்க முடியவில்லை என்று குற்றமாக கூறுகிறார். இதுகுறித்து துரைமுருகன் தெளிவாக விளக்கம் அளித்து விட்டார். அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பதவியேற்பு நடைபெறாத முடியாத நிலை இருப்பதாக தெளிவாக கூறிவிட்டார்.
தமிழ்நாட்டில் சாதிய வேறுபாடுகளை புகுத்தி பூணூல் அணிவிக்கும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் கோயில்கள் ஆக்கிரமித்து இருப்பதாக பிரதமர் கூறுகிறார். ஒரு காலத்தில் கோயிலுக்குள்ளே நுழைய முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டத்தை கொண்டு வந்ததுதான் திராவிடம் மாடல் ஆட்சி. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அர்ச்சகராகலாம் என ஏழு பெண்களை ஓதுவார்களாக நியமித்திருக்கிற அரசு தமிழக அரசுதான்’’.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.