Minister Masthan: அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஷாக் - விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு - திமுக அதிரடி
DMK Cadres Changed: திமுக இரண்டு மாவட்ட செயலாளர்களை புதியதாக நியமித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Minister Masthan: அமைச்சர் செஞ்சி மஸ்தானை விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு:
இதுதொடர்பான அறிவிப்பில், “விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக டாக்டர் ப. சேகர், (28, ஜெயபுரம் 2வது தெரு, திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் - 604 001) அவர்கள் விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என திமுக தலைமை அறிவித்துள்ளது.
விழுப்புரம் தெற்கு மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்.
— DMK (@arivalayam) June 11, 2024
- தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/TtSenvyhfE
விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் நியமனம்:
மற்றொரு அறிவிப்பில், “விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த நா.புகழேந்தி அவர்கள் மறைவெய்திய காரணத்தால் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற டாக்டர் தெ.கௌதம்சிகாமணி, எம்.எஸ். (ஆர்த்தோ) அவர்கள் விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என திமுக தலைமை அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டியில் களமிறங்கும் பொன்முடியின் மகன்?
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், இந்த தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஊயிரிழந்ததை தொடர்ந்து, ஜுலை 10ம் தேதி அங்கு இடைதேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் பொன்முடியின் மகனும், தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவருமான கௌதம சிகாமணி, திமுக சார்பில் போட்டியிடுவார் என தகவல் வெளியானது.
பொன்முடியை சமாதானப்படுத்தும் திமுகவின் முயற்சி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டு வென்ற கௌதம சிகாமணிக்கு, அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மூத்த அமைச்சரான பொன்முடி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அவரை சமாதானப்படுத்தும் விதமாக, கௌதம சிகாமணிக்கு மாவட்ட செயலாளர் பதவியை திமுக தலைமை வழங்கியுள்ளது.
இதனிடையே, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட 5 பேரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதன்படி, மறைந்த எம்எல்ஏ புகழேந்தியின் மகனான செல்வகுமார் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, விக்கிரவாண்டி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், விவசாய அணி துணைச் செயலாளரான அன்னியூர் சிவா மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் ஆகியோரும் இந்த போட்டியில் உள்ளனர்.