Mekadatu: மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் - ராமதாஸ்
மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறித்தினார்.
இதுகுறித்து, இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று மீண்டும், மீண்டும் கூறி வரும் கர்நாடக அரசு அதற்கான செயல்திட்டத்தை வகுப்பது குறித்து, இந்த வார இறுதியில் சட்ட மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பது மிகவும் ஆபத்தானது ஆகும். பெங்களூரில் நேற்று பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர் மத்திய அரசிடம் உரிய அனுமதிகளைப் பெற்று அணை கண்டிப்பாக கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தமிழக அரசிடம் உறுதியளித்த பிறகும் கூட, அணையை கட்டியே தீருவோம் என்று அம்மாநில அரசு கூறுவதும், அதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவதும் இரு மாநில உறவைச் சீர்குலைத்துவிடும். இது கண்டிக்கத்தக்கது. இத்தகைய அத்துமீறலை கர்நாடகம் கைவிட வேண்டும்.
கர்நாடக அரசின் இந்த போக்கு இரு மாநில உறவுகளுக்கு எதிரானது என்பது ஒருபுறமிருக்க, இந்த விஷயத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் முறையிட்டதுன் நமது கடமை முடிந்துவிட்டதாக தமிழக அரசு ஒதுங்கிவிடக்கூடாது.
மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் எந்த அனுமதியும் கர்நாடக அரசுக்கு வழங்கப்படாது என்று மத்திய நீிர்வளத்துறை அமைச்சர் உறுதியளித்திருந்தாலும், அதை மட்டுமே நம்பிக்கொண்டு மேகதாது அணை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அமைச்சர்களாக இருந்த பலரும் இதேபோன்று வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள். ஆனால், அவற்றை கடந்து 2018ம் ஆண்டில் மேகதாது அணை திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இப்போதும் கூட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்தாலேயே மேகதாது அணையை கர்நாடகம் கட்டிவிட முடியாது என்று அமைச்சர் துரைமுருகனிடம் உறுதியளித்துள்ள மத்திய அமைச்சர் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாகவோ, அந்த அனுமதியின் அடிப்படையில் தயாரிக்கப்படும் எந்த ஆவணமும் செல்லாது என்றோ கூறவில்லை.
அரசியல் காரணங்களுக்காக கர்நாடக பக்கம் மத்திய அரசு சாயாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மேககதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டம், சட்ட வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி புதுப்புது உத்திகளை வகுத்து வரும் நிலையில், தமிழக அரசும் கர்நாடகத்தை எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுக்க வேண்டும்.
எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேகதாது அணை குறித்த வழக்கை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அனைத்து வாய்ப்புகளையும் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், படிக்க:
Mekedatu Dam Project : மேகதாது அணை: விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்- இபிஎஸ்