'குடியரசு நாள் அணிவகுப்பு; மாநிலங்களுக்கு அவமதிப்பு!' - வைகோ கடும் கண்டனம்
நடப்பு ஆண்டிற்கான குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆகியவை நடைபெறும். இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதிய கடிதத்தில், விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து மதிமுக கட்சி தலைவர் வைகோ அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், ”ஜனவரி 26, தில்லியில் நடைபெறுகின்ற குடியரசு நாள் அணிவகுப்பில் இடம் பெறுவதற்கான தமிழக அரசு ஊர்தியில் பாரதி, வ.உ.சி., வேலு நாச்சியார் படங்கள் இடம் பெறத் தமிழக அரசு முடிவு செய்து, ஒன்றிய அரசின் கவனத்திற்கு அனுப்பி இருந்தது.
அந்த ஊர்திக்கு, அணிவகுப்பில் இடம் தர முடியாது என ஒன்றிய அரசு மறுத்து இருப்பது, ஏழரைக் கோடித் தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் ஆகும். கேரளம், மேற்குவங்கம், ஆந்திர அரசுகளின் ஊர்திகளுக்கும் இடம் தரவில்லை. இது தான்தோன்றித்தனமான போக்கு ஆகும். கூட்டு ஆட்சிக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் செயல் ஆகும்.
பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்புகள், இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. மாறாக, வெறுப்பு உணர்வை விதைக்கின்ற வகையிலேயே அமைந்து இருக்கின்றது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாறைத் திரித்து எழுதுகின்றார்கள். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில், வரலாற்றுப் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கின்றார்கள்.
காந்தி, நேரு மற்றும் முன்னணித் தலைவர்களின் பங்களிப்பை மறைத்து, காவித் தலைவர்களை முன்னிலைப்படுத்தி வருகின்றார்கள். மறைக்கப்பட்ட வீரர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றோம் என்று கூறி, கட்டுக்கதைகள், கற்பனைகள், பொய்யான புனைந்துரைகளை வரலாறாகச் சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள். போலிகளை முன்னிலைப்படுத்துகின்றார்கள்.
பாரதி ஒரு தேசிய கவி என அறிவித்து, நாடாளுமன்றத்தில் பாரதிக்குச் சிலை அமைத்து, தலைநகர் தில்லியில் சாலைக்குப் பெயர் சூட்டி, ஏற்கனவே ஒன்றிய அரசு பெருமைப்படுத்தி இருக்கின்றது. பிரதமர் நரேந்திர மோடியும், எத்தனையோ முறை புகழ் ஆரம் சூட்டி இருக்கின்றார். பாரதி, வ.உ.சி., வீரத்தாய் வேலு நாச்சியாரின் தியாகம், வட இந்திய விடுதலைப்போராட்ட வீரர்களின் பங்களிப்பிற்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. இந்திய விடுதலைப் போரில், தமிழகத்தின் பங்களிப்பு மகத்தானது.
இந்தியாவுக்கு வெளியே, உலக அரங்கில் நடைபெறுகின்ற கண்காட்சிகளிலும் இத்தகைய வரலாற்றுத் திரிபு வேலைகளைச் செய்து வருகின்றார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் நடைபெறுகின்ற தொழில் வணிக கண்காட்சி எக்ஸ்போ, தற்போது துபாயில் நடைபெற்று வருகின்றது. 200 நாடுகள் பிரமாண்டமான அரங்குகளை அமைத்து உள்ளன. பிற நாடுகளின் அரங்குகளில், அந்த நாடுகளின் தலைவர்கள் படங்கள் கிடையாது; நாடுகளின் சாதனைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி இருக்கின்றார்கள். ஆனால் இந்திய அரங்கில், சர்தார் வல்லபாய் படேல் சிலை, இராமர் கோவில், பிரதமர் நரேந்திர மோடி அரசைப் புகழ்கின்ற காணொளிகளையே முன்னிலைப்படுத்தி இருக்கின்றார்கள்.
கடந்த பல ஆண்டுகளாகவே, குடியரசு நாள் அணிவகுப்பில், தமிழகம், கேரளம், மேற்கு வங்க மாநிலங்களின் ஊர்திகளுக்கு உரிய இடம் தருவது இல்லை. அடிமை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், தில்லி எஜமானர்களின் எண்ண ஓட்டத்திற்கு இசைவாகவே நடந்து கொண்டார்கள். தமிழகத்தின் பெருமைகளை முன்னிலைப்படுத்தவில்லை.
குடியரசு நாள் அணிவகுப்பு என்றால், ஒவ்வொரு ஆண்டும், அனைத்து மாநிலங்களின் சார்பிலும் ஊர்திகள் கட்டாயம் இடம் பெற்றாக வேண்டும். அந்த உரிமையை மறுக்கின்ற அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இல்லை. எனவே, தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்க அரசுகளின் ஊர்திகளுக்கு இடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.