உதயசூரியன் சின்னம்... மதிமுக கொடி... சீர்காழி எம்.எல்.ஏ செந்தில்செல்வனின் 'ட்விஸ்ட்' அரசியல் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
சென்னையில் நடந்த மதிமுக கூட்டத்தைப் புறக்கணித்த சீர்காழி எம்.எல்.ஏ செந்தில்செல்வன், மயிலாடுதுறை அரசு விழாவிற்கு மதிமுக கொடி கட்டிய காரில் வந்தது பெரும் விவாதத்தைக் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழா ஒன்றிற்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்செல்வன் மதிமுக கொடி கட்டிய காரில் வந்திறங்கிய சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தை அவர் புறக்கணித்திருந்த நிலையில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த மழுப்பலான பதில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
பின்னணி என்ன?
கடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) இடம் பெற்றிருந்தது. கூட்டணி ஒப்பந்தத்தின்படி, மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டனர். மாநிலம் முழுவதும் நான்கு இடங்களில் மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் களம் கண்டனர். அதில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி(தனி) சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்செல்வன் உள்ளிட்ட இருவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும், அவர்கள் மதிமுகவின் பிரதிநிதிகளாகவே அரசியல் மேடைகளில் பார்க்கப்பட்டனர்.
உயர்நிலைக் கூட்டப் புறக்கணிப்பும் அரசியல் சர்ச்சையும்
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மதிமுகவின் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டமான உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் எதிர்கால நகர்வுகள் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த மிக முக்கியமான கூட்டத்தில், மதிமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மட்டும் கலந்து கொண்டார். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து அவர், தான் திமுகவின் உறுப்பினராக உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி தொடர்ந்து திமுக உறுப்பினராக இருப்பதாகவும், அதனால் இனி மதிமுக கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், தொடர்ந்து 5 ஆண்டுகள் எம்எல்ஏவாக பயணிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்திலும், மதிமுக தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
இதுகுறித்து அப்போதே சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்செல்வனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் அதிரடியான விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். "நான் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுத்தான் வெற்றி பெற்றேன். சட்டபூர்வமாக நான் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் என்றே கருதப்படுவேன். எனவே, மதிமுகவின் உட்கட்சிக் கூட்டத்தில் நான் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை"
என்று கூறி பரபரப்பைக் கூட்டினார். மேலும், "மதிமுக தலைமை எத்தகைய முடிவை எடுத்தாலும், எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன்" என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இதனால் அவருக்கும் மதிமுக தலைமைக்கும் இடையே விரிசல் விழுந்தாக கூறப்பட்டது.
மயிலாடுதுறையில் நடந்த ட்விஸ்ட்!
இத்தகைய அரசியல் சூழலுக்கு மத்தியில், மயிலாடுதுறையில் மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கான சிறப்பு கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதற்காகச் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்செல்வன் வருகை தந்தார்.
அப்போது, விழா அரங்கின் வாசலில் வந்து நின்ற அவரது காரைக் கண்டு அங்கிருந்தவர்கள் நொடிகள் ஸ்தம்பித்துப் போயினர். ஏனெனில், சில நாட்களுக்கு முன்பு "நான் உதயசூரியன் சின்னத்தில் வென்றவன், மதிமுக கூட்டத்திற்குச் செல்லத் தேவையில்லை" என்று கூறிய செந்தில்செல்வன், இன்று தனது காரின் முகப்பில் கம்பீரமாக மதிமுகவின் கொடியைக் கட்டிக்கொண்டு வந்திருந்தார்.
கட்சித் தலைமையுடன் முரண்பட்டு நிற்கும் வேளையில், இன்னும் மதிமுக கொடியைப் பயன்படுத்தி வருவது அங்கிருந்த அரசியல் விமர்சகர்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது.
செய்தியாளர்கள் கேள்வி - எம்.எல்.ஏவின் மழுப்பல் பதில்
நிகழ்ச்சி நிறைவடைந்ததும், காரை நோக்கிச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் செந்தில்செல்வனை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைத்தனர்.
செய்தியாளர்: "சென்னையில் நடந்த மதிமுக உயர்நிலைக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு, நான் உதயசூரியன் சின்னத்தில் வென்றவன் என்று கூறினீர்கள். ஆனால் இன்று மதிமுக கொடி கட்டிய காரில் வந்துள்ளீர்களே? நீங்கள் இன்னும் மதிமுகவில் தான் தொடர்கிறீர்களா அல்லது திமுகவிற்குச் செல்லப் போகிறீர்களா?"
இந்தக் நேரடியான கேள்விக்கு நேரடியாகப் பதில் அளிப்பதைத் தவிர்த்த செந்தில்செல்வன், புன்னகைத்தவாறே மழுப்பலாகப் பதிலளித்தார்.
"நான் இப்போது மக்கள் பணியில் இருக்கிறேன். என்னை நம்பி வாக்களித்த தொகுதி மக்களுக்குத் தொடர்ந்து கடமையாற்றுவது மட்டுமே எனது இப்போதைய நோக்கம். மக்களுக்குத் தொடர்ந்து அர்ப்பணிப்போடு கடமையாற்றுவேன்" என்று மட்டும் கூறிவிட்டு, மேற்கொண்டு கேள்விகள் எதற்கும் இடம் கொடுக்காமல், காரில் ஏறி அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்.
அரசியல் வட்டாரத்தில் ஓடும் கணக்குகள்
செந்தில்செல்வனின் இந்த மழுப்பலான பதில் மற்றும் மதிமுக கொடியுடனான பயணம் ஆகியவை பல்வேறு அரசியல் கணக்குகளைப் பிரதிபலிக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
மறைமுக அழுத்தம்
மதிமுக தலைமைக்குத் தனது முக்கியத்துவத்தைக் காட்டுவதற்கும், அதே நேரத்தில் திமுக தலைமையின் கவனத்தை ஈர்ப்பதற்கும் அவர் இந்த 'இரட்டை நிலைப்பாட்டை' கையாள்வதாகக் கூறப்படுகிறது.
"மதிமுகவில் தொடர்கிறீர்களா?" என்ற எளிமையான கேள்விக்கு "ஆம்" என்றோ "இல்லை" என்றோ கூறாமல், "மக்கள் பணியில் இருக்கிறேன்" என்று செந்தில்செல்வன் கூறியிருப்பது, அவர் தற்போதைக்குத் தனது அரசியல் நகர்வுகளைத் தீர்க்கமாக வெளிப்படுத்த விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. எது எப்படியோ, சீர்காழி எம்.எல்.ஏவின் இந்த 'கொடி அரசியல்' மயிலாடுதுறை மாவட்ட அரசியலில் தற்போதைக்கு ஹாட் டாபிக்காக மாறியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்























