புதுச்சேரி அரசியலில் முக்கிய பொறுப்புக்கு வர போகும் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன்
புதுச்சேரி பா.ஜ.,வில் சேர்ந்துள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், 1,000 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்த்தார்.
புதுச்சேரி: புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், காமராஜர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது.
புதுச்சேரியில் ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்ட் ஆகியோர் பாஜகவில் சட்டமன்ற உறுபினர்களாக உள்ளனர். ஜான்குமார் அரசியலுக்கு வருவதற்கு முன், லாட்டரி சீட்டு விற்பனை செய்தார். அவரது குருவாக லாட்டரி அதிபர் மார்ட்டின் இருந்தார். லாட்டரி தடை செய்யப்பட்டதால், கேபிள் டி.வி., நடத்திக் கொண்டு அரசியலில் கால் பதித்தார்.
தமிழகத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்த நிலையில், மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேற்று புதுச்சேரி வந்தார். காமராஜர் நகர் தொகுதியில் ஜான்குமார் ஏற்பாடு செய்திருந்த விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். புதுச்சேரி பா.ஜ.,வில் சேர்ந்துள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், 1,000 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்த்தார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், வெங்கடேசன், பா.ஜ., ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கர், அங்காளன், கொலப்பள்ளி சீனிவாஸ் கலந்து கொண்டனர். அரசியலில் தீவிரமாக பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன் என, ஜோஸ் சார்லஸ் கூறினார்.
நிகழ்ச்சியில் ஜான்குமார் மகனான சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் மேடையில் பேசுகையில், எனது தந்தை ஜான்குமார் நெல்லித்தோப்பு தொகுதியை எனக்கு தந்துவிட்டு காமராஜர் தொகுதிக்கு வந்தார். இருவரும் எம்எல்ஏக்களாக உள்ளோம். அவரை விட ஒருபடி மேலாக சார்லஸ் மார்டின் வந்துள்ளார். என் தந்தை செய்ததை விட பல மடங்கு செய்வார். மிக முக்கியப் பொறுப்புக்கு அவர் வரபோகிறார் என பேசினார்.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தெரிவிக்கையில், நன்றாக படித்தவர், உலக நாடுகளை அறிந்தவர், அங்கு இருப்பவைகளை புதுச்சேரிக்கு கொண்டு வர ஆசைப்படுகிறார் என்றார். புதுச்சேரியில் பாஜக மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது கூட்டாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனை அழைத்து வந்து விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.