“உயர்நீதிமன்ற விழாவில் சட்டத்துறை அமைச்சரா? உங்களுக்கு இழிவு” - தலைமை நீதிபதிக்கு அண்ணாமலை கடிதம்!
கிரிமினல் வழக்கு உள்ள ஒருவர் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல் ஒரு தவறான முன்னுதாரணமாக அமையும். இது அந்த நிகழ்வுக்கும் கலந்துகொள்ளும் உங்களுக்கும் மிகப்பெரிய இழிவாக அமையும்.
![“உயர்நீதிமன்ற விழாவில் சட்டத்துறை அமைச்சரா? உங்களுக்கு இழிவு” - தலைமை நீதிபதிக்கு அண்ணாமலை கடிதம்! Law Minister should not attend Chennai High Court combined building inauguration function Annamalai letter to Chief Justice “உயர்நீதிமன்ற விழாவில் சட்டத்துறை அமைச்சரா? உங்களுக்கு இழிவு” - தலைமை நீதிபதிக்கு அண்ணாமலை கடிதம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/22/50ffdfedf6b8638de5bec4fb2d48d47a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் அடிக்கல் நாட்டு விழா மற்றும் கட்டட திறப்பு விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொள்ள கூடாது என்று பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய அட்மினிஸ்ட்ரேஷன் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக திறப்பு விழாவும் நாளை (23/04/2022) நடைபெற உள்ளது. இந்த விழாவினை இந்திய தலைமை நீதிபதி தலைமை தாங்கி நிகழ்த்தி கொடுக்கிறார். மேலும் இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர். இந்நிலையில் இந்த விழாவில் அமைச்சர் ரகுபதி கலந்துகொள்ள கூடாது என்று அண்ணாமலை கூறி உள்ளார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மீது ஊழல் வழக்கு இருப்பதாக கூறி அவர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள கூடாது என இந்தியத் தலைமை நீதிபதிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை இந்தியத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்புட்டுள்ளதாவது, "23/04/2022 அன்று சென்னை உயர்நீதிமன்ற அட்மினிஸ்ட்ரேஷன் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா மற்றும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக திறப்பு விழா ஆகியவை இந்தியத் தலைமை நீதிபதியின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உயர்நீதிமன்ற நீதிபதிகள், பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். மதிப்புமிக்க இந்தியத் தலைமை நீதிபதி கலந்துகொள்ளும் ஒரு மேன்மையான விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியும் கலந்து கொள்கிறார். இவர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. அவர்மீது கிரிமினல் வழக்கு எண். 613 - 616 / 2015, (ஊழல் தடுப்புச் சட்டம் சம்மந்தப்பட்டது) போடப்பட்டு இன்னும் நிலுவையில் உள்ளது. கிரிமினல் வழக்கு உள்ள ஒருவர் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல் ஒரு தவறான முன்னுதாரணமாக அமையும். இது அந்த நிகழ்வுக்கும் கலந்துகொள்ளும் உங்களுக்கும் மிகப்பெரிய இழிவாக அமையும். இவர் கலந்து கொள்வதன்மூலம் பொதுமக்களுக்கு இந்த நிகழ்வின்மீது தவறான அபிப்பிராயங்கள் உண்டுசெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. கிரிமினல் வழக்கு உள்ள ஒருவர் இந்தியத் தலைமை நீதிபதியோடு மேடையில் சரிக்கு சமமாக எப்படி அமர்வது? இது இந்த நிகழ்வுக்கு மட்டுமின்றி இந்த நாட்டின் நேர்மை, மரியாதை, பெருமை ஆகியவற்றிற்கு பங்கம் விளைவிக்கும்." என்று எழுதி இருந்தார்.
மேலும் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு எழுதிய அவர், "இதே போன்று 2004 இல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திறப்பு விழாவில் அப்போதைய முதல்வர் மறைந்த, செல்வி.ஜெ.ஜெயலலிதா கலந்து கொள்ள இருந்தார். அந்த நேரத்தில் திமுகவை சேர்ந்த தலைவர்கள் அவர்மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி கலந்துகொள்ள விடாமல் தடுக்க பல வழிகளில் இந்தியத் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து அவர் அந்த விழாவில் கலந்துகொள்ளவும் இல்லை. மேலும் அவரது பெயர் கூட அந்த விழாவில் எங்கும் இடம்பெறவில்லை. அதே போன்ற நிகழ்வு இப்போது மீண்டும் நடக்கிறது, ஊழல் வழக்கு உள்ள சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார் என்னும் விஷயத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்" என்று எழுதியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)