‘அவர்கள் வயிறு எரியும்... இதனால்தான் பூஜைகளில் பங்கேற்றேன்’; மீண்டும் கையில் செங்கலுடன் உதயநிதி ஸ்டாலின்
“நான் பூஜைகளில் கலந்து கொண்டது எதற்காக என்று தெரியுமா?” என்று எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது கட்சியினர் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. மேலும் 320 ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் கலந்துக்கொண்ட தி.மு.க., இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின், திமுக அலுவலக கட்டிடத்திற்காக ஐம்பொன் முலாம் பூசப்பட்ட செங்கலை கொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் பேசியதுதான் விழாவின் ஹைலைட்டாக அமைந்தது. அவர் பேசியதாவது: தி.மு.க., அலுவலக கட்டிடம் கட்டிட ஐம்பொன் செங்கலை என்னிடத்தில் கொடுத்து அதற்கு உண்டான பூஜைகளை செய்தனர். மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கலாம். ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை எல்லாம் கிடையாது.
இதைப் பார்த்து நமது எதிரிகள் வயிறு எறிவார்கள். அதற்காகவே அமைதியாக பூஜைகளில் கலந்து கொண்டேன். எனக்கும் செங்கல்லுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் இதுவரை அப்படியேதான் இருக்கிறது. பிரச்சாரத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால் இதுவரை அந்த பணிகள் தொடங்கவில்லை. தி.மு.க.வின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே மூத்த உறுப்பினர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி கூறிய ரூ.15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் இதுவரை பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
மற்றவர்கள் நம்பிக்கையில் நான் குறுக்கிட மாட்டேன் என்பது போல் உதயநிதி ஸ்டாலின் பேசியது கட்சியினர் மத்தியில் செம வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சட்டசபை பிரச்சாரத்தின் போது எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் நடக்கவில்லை என்று கூறியதை தற்போது செங்கல் கல்லுக்கும் எனக்கும் உள்ள தொடர்பற்றி அனைவரும் அறிவார்கள் என்று தெரிவித்ததும் கட்சியினர் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
கும்பகோணத்தை தொடர்ந்து தஞ்சாவூரில் மத்திய மாவட்ட திமுக சார்பில், "விழுதுகளாக தாங்கி நிற்போரை தாங்கும்" பொற்கிழி வழங்கல், திமுக மூத்த முன்னோடிகளின் உருவப் படம் திறப்பு, கட்சி கொடியேற்று விழா என முப்பெரும் விழா கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் டிகேஜி.நீலமேகம், க.அண்ணாதுரை, என்.அசோக்குமார், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.ராமச்சந்திரன், மகேஸ் கிருஷ்ணசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 600 கட்சியின் முத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்துக்கான பொற்கிழிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசுகையில், இனிமேல் தமிழகம் முழுவதும் கட்சியின் முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழியாக வழங்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்