Thrissur: கேரளாவில் மலர்ந்த முதல் தாமரை.. திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி!
Kerala Lok Sabha Election Results 2024: கேரள திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. கருத்துக்கணிப்புகளுக்கு நேர் மாறாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கேரளாவில் பாஜக சாதனை: 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது. ஆனால், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கூட இன்னும் கிடைக்கவில்லை. 298 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
பாஜக மட்டும் 240 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 228 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மட்டும் 97 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 272 எம்பிக்களின் ஆதரவு தேவை.
ஒட்டு மொத்தமாக பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளித்தாலும், கேரளாவில் இருந்து நல்ல செய்தி வந்துள்ளது. வரலாற்றில் முதல்முறையாக கேரளாவில் உள்ள ஒரு மக்களவை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற சுரேஷ் கோபி: திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளார். 4 லட்சத்து 553 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வி.எஸ். சுனில் குமார் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு 3 லட்சத்து 27 ஆயிரத்து 405 வாக்குகள் கிடைத்துள்ளது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே. முரளிதரனுக்கு 3 லட்சத்து 19 ஆயிரத்து 380 வாக்குகள் கிடைத்துள்ளது. தேசிய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்திருந்தாலும் கேரளாவில் அவர்கள் தனித்தனியே போட்டியிட்டனர்.
திருச்சர் தொகுதியை பொறுத்தவரையில், கடந்த 25 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றன. கடந்த முறை இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கடந்த 2014ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சி. என். ஜெயதேவன் வெற்றி பெற்றார்.
கேரளாவில் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 17 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதையும் படிக்க: Election Results 2024 LIVE: சந்திரபாபு நாயுடுவுடன் பேசிய சரத்பவார்?: பாஜக கூட்டணியை தூக்குகிறதா இந்திய கூட்டணி!