மத்திய அரசில் தொடங்கி தமிழக அரசில் முடித்த ஜோதிமணி எம்.பி... மின்கட்டண எதிர்ப்பு குரல்!
”ஒன்றிய மோடி அரசின் கொடுமையான ஜிஎஸ்டி வரி மற்றும் மோசமான நிர்வாகத்தால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” - ஜோதிமணி
தமிழ்நாட்டில் நேற்று முன் தினம் (ஜூலை.18) மின் கட்டணம் உயர்வதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
அரசியல் தலைவர்கள் கண்டனம்
இதனையடுத்து தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் பொது மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மின் கட்டண உயர்வுக்கு வருத்தம் தெரிவித்து கரூர் எம்பி முன்னதாக ட்வீட் செய்துள்ளார்.
"ஒன்றிய மோடி அரசின் கொடுமையான ஜி.எஸ்.டி வரி மற்றும் மோசமான நிர்வாகத்தால் அத்யாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தொழில்கள் நசிவடைந்துள்ளன.
மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கோரியுள்ளார். ஒரே நேரத்தில் நேரடியாக தமிழக அரசை குற்றம்சாட்டக் கூடாது என்பதற்காக, மத்திய அரசை குறை கூறி, கூட்டணி தர்மத்தோடு தமிழக அரசையும் கண்டித்துள்ள ஜோதிமணி எம்.பி.,யின் பதிவை, பலர் விமர்சித்து வருகின்றனர்.
ஒன்றிய மோடி அரசின் கொடுமையான ஜி.எஸ்.டி வரி மற்றும் மோசமான நிர்வாகத்தால் அத்யாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தொழில்கள் நசிவடைந்துள்ளன.
— Jothimani (@jothims) July 20, 2022
மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
’தமிழ்நாட்டை ஆள்வது பாஜகவா, திமுகவா’
முன்னதாக நாம் கட்சித் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு மூலம் பலமுறை அழுத்தம் தந்ததாகக் கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மின் கட்டண உயர்வை அறிவித்த நிலையில், தமிழகத்தை ஆளுவது திமுகவா அல்லது பாஜகவா என்ற சந்தேகத்தை மக்களுக்கு எழுப்புவதாகவும், மக்களின் தலையில் வரிச்சுமையை ஏற்றி மானியம் பெற நினைப்பது திமுக அரசின் கையாலாகத்தனம் எனவும் சீமான் கடுமையாக சாடியிருந்தார்.
பாஜக போராட்டம்
அதேபோல், மின் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 23ஆம் தேதி தமிழ்நாடு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசின் மானியத்தை ஏற்று கொள்ளாமல் தனியாரிடம் அதிக விலையில் வாங்கி தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறுவதாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
மக்களுக்கு பாதிப்பில்லாத கட்டண உயர்வு
தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளார்.
200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 2 மாதங்களுக்கு 27.50 ரூபாய் கூடுதல் மின் கட்டணம், 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 147.50 ரூபாய் கட்டணம், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 298.50 கூடுதல் மின் கட்டணம் என அறிவிக்கப்பட்டது.
மேலும், நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று நுகர்வோரே எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும்,ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்புத் திட்டம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்