Karnataka Election: கர்நாடகாவில் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டி: வேட்பாளரை அறிவித்த எடப்பாடி பழனிசாமி
கர்நாடக மாநிலத்தில் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும், ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கு காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக பரப்புரையிலும், தேர்தல் வியூகத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
கர்நாடகாவில் தமிழர்கள் பல பகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர். தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் பல ஆண்டுகளாக அங்கு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு காந்திநகர், கோலார் தங்கவயல் மற்றும் பங்காருபேட் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.
கர்நாடகாவில் அ.தி.மு.க. போட்டி:
இந்த நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 10.5.2023 அன்று நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில், புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அன்பரசன் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்பரசன் கர்நாடக அ.தி.மு..க அவைத்தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புலிகேசிநகர் தொகுதியில் ஏற்கனவே 2008ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஹானூர், காந்திநகர் மறறும் கோலார் தங்கவயல் பகுதியில் போட்டியிட்டது என்பதும், 2013ம் ஆண்டு கர்நாடகாவின் 5 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று முக்கிய முடிவு:
இந்த சூழலில், தற்போது கர்நாடகவில் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழர்கள் அதிகம் வசிககும் பெங்களூர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின் வாக்குகளை கவர பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., கர்நாடகாவில் பா.ஜ.க.விடம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், திடீரென பா.ஜ.க. வேட்பாளரை அறிவித்துள்ள புலிகேசிநகர் தொகுதியில் அ.தி.மு.க.வும் வேட்பாளரை களமிறக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி, எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு இன்று எடுக்க உள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி அதிரடியாக வேட்பாளரை அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பா.ஜ.க.விற்கு நெருக்கடி:
நாளை நடைபெறும் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அங்கு ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் காங்கிரசில் இணைந்து வருவது பெரும் பின்னடைவை பா.ஜ.க.விற்கு ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வே பா.ஜ.க.வை எதிர்த்து நிற்பது பா.ஜ.க.விற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Annamalai in Karnataka : ‘ஹெலிகாப்டரில் மூட்டை மூட்டையாக பணம் எடுத்துச் சென்றாரா அண்ணாமலை?’ சோதனையில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி..!
மேலும் படிக்க: Millet Benefits : சிறுதானியம் சாப்பிட்டா இவ்ளோ நன்மையா? அமைச்சருக்கு அட்வைஸ் கொடுத்த பெண்.. பிரதமர் பகிர்ந்த வீடியோ..