”பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாக்க `உறவினர் பாதுகாப்பு திட்டத்தை' செயல்படுத்துக” - கமல்ஹாசன் வேண்டுகோள்
கொரோனா தொற்று காலத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பாதுகாக்க உறவினர் பராமரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பெரியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் பெற்றோர்கள் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்படுவதால், குழந்தைகளின் பராமரிப்பு சிரமத்திற்கு ஆளாகி உள்ளது. இந்த நிலையில், மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றின் கொடூர தாண்டவத்தால் நிறைய குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். வாடி நிற்கும் பிஞ்சுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக்கல்வி மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. டெல்லி அரசும் இலவசக்கல்வி வழங்குகிறது. ஆந்திர அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கிக்கணக்கு தொடங்கி 10 லட்சம் டெபாசிட் தொகையாக செலுத்தப்படும் என்றும், இந்த டெபாசிட் தொகையின் மூலமாக கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் பாதுகாவலர் அந்தக் குழந்தையை நன்றாக கவனிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளை அவர்களின் உறவினர் அல்லது பெற்றோரில் நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் பராமரிப்பதே சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏற்கனவே இழப்பில் வாடும் குழந்தைகளை முன்பின் தெரியாதவர்கள் தத்தெடுத்தால், குழந்தைகள் மனரீதியில் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மாநிலத்துறைகளும் சிறார் நீதிச்சட்டம் அடிப்படையில் பெற்றோரை இழந்தவர்களை பராமரிக்க `உறவினர் பராமரிப்புத் திட்டத்தை' செயல்படுத்த வேண்டும்.
கொரோனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெற்றோர்களின் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என உறுதி செய்யவும் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். குழந்தைகளுக்கும், அவர்களை பராமரிப்பவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்துதர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பெற்றோர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக பாதுகாப்பு மையம் ஒன்று நெல்லையில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.