RM Veerappan: பாட்ஷா வெற்றி விழாவில் நடந்தது என்ன? ஆர்.எம்.வீரப்பன் மீது ஜெ.க்கு ஏன் கோபம்?
ஜெயலலிதாவின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவி, பாட்ஷா பட வெற்றி விழாவிற்கு பிறகு பறிக்கப்பட்டது.
![RM Veerappan: பாட்ஷா வெற்றி விழாவில் நடந்தது என்ன? ஆர்.எம்.வீரப்பன் மீது ஜெ.க்கு ஏன் கோபம்? Jayalalithaa angray RM Veerappan for Bashaa movie Success meet rajinkanth Controversy speech RM Veerappan: பாட்ஷா வெற்றி விழாவில் நடந்தது என்ன? ஆர்.எம்.வீரப்பன் மீது ஜெ.க்கு ஏன் கோபம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/63aaea36e082d3c4489a25237e8bed881712665116601102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய விசுவாசியாக இருந்தவரும், எம்.ஜி.ஆர். அரசியலில் தொடர்ந்து வெற்றி பெற பக்கபலமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அப்பேற்பட்ட ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பதவி பறிபோனதற்கு ரஜினிகாந்த் காரணமாக அமைந்தார்.
பாட்ஷா:
பிரபல தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பன் தன்னுடைய சத்யா மூவீஸ் மூலமாக எம்.ஜி.ஆரை வைத்து ஏராளமான வெற்றிப்படங்களை அளித்தது போலவே, எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து ராணுவ வீரன், மூன்று முகம், பணக்காரன், ஊர்க்காவலன் என ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்தார்.
பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு 1995ம் ஆண்டு ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாட்ஷா படம் வெளியானது. ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் பாட்ஷா. சமீபகாலத்தில் கே.ஜி.எஃப். படம் எப்படி இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதைவிட பன்மடங்கு இந்திய திரையுலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது பாட்ஷா படம்.
வெற்றி விழாவில் நடந்தது என்ன?
அந்த படத்தை சத்யா மூவீஸ் நிறுவனம் சார்பில் தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. முதன்முறை முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சி நடத்திக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் ஆட்சி மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தது.
அந்த சூழலில், பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் அ.தி.மு.க. ஆட்சி மீதான அதிருப்தியை மிக வெளிப்படையாக ரஜினிகாந்த் பேசினார். அ.தி.மு.க. அமைச்சரான ஆர்.எம்.வீரப்பன் அமர்ந்திருந்த அந்த மேடையில், ரஜினிகாந்த் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்று பேசினார். அதைக்கேட்டுக் கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பன் அமைதியாக மேடையில் உட்கார்ந்திருந்தார்.
தனிக்கட்சி தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன்:
இந்த சம்பவம் ஜெயலலிதாவிற்கு ஆர்.எம்.வீரப்பன் மீது மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்தார். பின்னர், அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வந்த அவர் எம்.ஜி.ஆர். பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். ரஜினிகாந்த் பாட்ஷா பட வெற்றி விழாவில் பேசியதும், ஜெயலலிதா மீதான அதிருப்தியும் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வை படுதோல்வி அடையச் செய்தது. அப்போது முதல் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் கடந்த சட்டசபைத் தேர்தலில் கட்சி தொடங்கி பின்னர் உடல்நலத்தை காரணம் காட்டி கட்சி தொடங்காமலே அரசியலுக்கு வராமல் ஒதுங்கிக் கொண்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)