தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக திட்டம் - எச்சரிக்கும் திருமாவளவன்
அத்தகைய அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் என திட்டமிடுகின்றனர். அதன் காரணமாக ஆளுநர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி வருகின்றனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழக ஆளுநரின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது திசை திருப்பும் முயற்சி. பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டு தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்கவும், அதற்கு என்ன வாய்ப்பு கிடைக்கும் என பார்க்கிறார்கள் என்றும், பாரதிய ஜனதா கட்சியினர் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
அனைத்து தரப்பினராலும் பாராட்டப் படக்கூடிய சமூக நீதியை பாதுகாக்கும், மிக சிறந்த அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அத்தகைய அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் என திட்டமிடுகின்றனர். அதன் காரணமாக ஆளுநர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பாரதிய ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியை சேர்ந்த அதி தீவிர மதவாத சக்திகளை ஆளுநராக நியமித்து வருகின்றனர். அவர்கள் மூலம் மத வெறுப்பை ஊக்கப்படுத்துவது, மத அடிப்படையிலான பிரிவினை உறுதிப்படுத்துவதற்கு பாரதிய ஜனதா அரசு முயல்கிறது.
இலங்கைக்கு இந்திய அரசு ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாயை உதவிகளை செய்துள்ளது. அந்த உதவிகள் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமையாக கிடைப்பதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும், கண்காணிக்க வேண்டும் இலங்கையில் தவிக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளது. அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையில் இந்த நிலைக்கு ராஜபக்ச குடும்பத்தினரும், அவர்களின் சுயநலமே காரணம், பொது சொத்தை கொள்ளையடிக்கின்ற சூரை ஆடும் மிக மோசமான ஆட்சி நிர்வாகத்தை ராஜபக்ச கும்பல் தந்துகொண்டு இருக்கிறது. ஈழத்தமிழர்களை எதிர்கொள்ள வேண்டும், தமிழ் ஈழ விடுதலை புலிகளை எதிர்கொள்ள வேண்டும் என இலங்கை அரசு உலகம் முழுவதும் கடன் பெற்றுள்ளது, பொருளாதாரத்தை மிக மோசமான நிலைக்கு நலிவடையும் நிலைக்கு ஆளாக்கியது ராஜபக்ச குடும்பம்தான், இந்த நிலைமைக்கு காரணமான ராஜபக்ச குடும்பம் பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும், இலங்கையில் புதிய ஆட்சியை உருவாக்கும் தேர்தல் வரவேண்டும் என்றார்.