(Source: ECI/ABP News/ABP Majha)
தாய் கழகம் என்ற அடிப்படையில் அதிமுகவை சரியான பாதையில் கொண்டு செல்வது எங்கள் கடமை - கி.வீரமணி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்த பிறகு பல கட்சிகள் காணாமல் போய்விடும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சேலத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, சாதி சங்கத்தினரால் சொந்தம் கொண்டாடப்பட்ட பெரியார் தொடங்கிய சேலம் சுயமரியாதை சங்க கட்டடம் பல ஆண்டுகளுக்குப் பிறகு சட்டரீதியாக மீட்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். பதிவுத்துறை ஐஜி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிட கழகத்திற்கு சாதகமான தீர்ப்பு கடந்த 31 ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இனி அந்தக் கட்டடத்தில் பொதுமக்களுக்கான வாசகர் சாலையில் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொருத்தவரை திமுக கூட்டணியின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி தன்நிலை தாண்டி முதலமைச்சரை தரம் தாழ்ந்து பேசியது இதற்கு முக்கிய காரணமாக உள்ளதாகவும் பழனிசாமியின் இந்த பேச்சு திமுக கூட்டணிக்கு பெரும் வெற்றியை தரும் என்றும் தெரிவித்த வீரமணி தேர்தல் நேரத்தில் கொள்கைகளையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமே தவிர இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
வெற்றி தோல்வியை விட கட்சி உறுதியாக உள்ளதா என்பதே முக்கியம் என்றும் பாஜகவின் கைங்கரியத்தால் அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து கிடப்பதாகவும் தாய் கலகம் என்ற அடிப்படையில் அதிமுகவினரை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டியது எங்கள் கடமை என்றும் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை பொருத்தவரையில் திமுக கூட்டணியினர் வாக்காளர்களை அடைத்து வைக்கவில்லை என்றும் தேர்தல் பணி குறித்த வழிகாட்டுதலுக்காக பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டது என்றும் வீரமணி விளக்கம் அளித்தார். தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய வீரமணி வாக்காளர்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். நேற்றைய தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கூறும் போது, 2024 ஆம் ஆண்டு இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் திமுகவின் கூட்டணி மூலமாகத்தான் பதில் அளிக்க முடியும் என கமல்ஹாசன் அரசியல் பூர்வமாக தெரிவித்துள்ளார் என்றார்.
அதிமுகவை பொருத்தவரை கட்சியில் ஒற்றுமை இல்லாமல் நான்காக உடைந்துள்ளது. பிற கட்சிகள் தாங்களும் கட்சி வைத்திருக்கிறோம் என்பதற்காக தேர்தலில் களம் இறங்குகின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்த பிறகு பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்றார். ஆம்புலன்ஸ் என்பது நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் நமது ஊரில் மட்டும் தான் ஆம்புலன்ஸ்சில் கட்டு கட்டாக பணத்தை எடுத்துச் செல்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் உலகத்தில் எங்கும் கேள்விப்பட முடியாதது. சட்டத்தின் கைகள் நீளம் சத்தத்தை மீறும் கைகள் அதைவிட நீளம் என்று கூறினார். டெல்லியில் ஏவிபி அமைப்பைச் சார்ந்தவர்கள் தமிழக மாணவர்களை தாக்கியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த வீரமணி, தமிழகத்தின் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது என சொல்லி வரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்த கேள்வியை அர்ப்பணிப்பதாக கூறினார். தமிழகத்தில் வட இந்தியர்களின் வருகை அதிகரிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்து விட்டதாகவும் இதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.