Durai Vaiyapuri: : ’இனி துரை வையாபுரி அல்ல, துரை வைகோ’ மதிமுகவில் முக்கிய பொறுப்புக்கு வருகிறாரா வைகோ மகன்..?
’துரை வையாபுரி என்ற முதல் அத்தியாயம் நேற்றுடன் முடிந்துவிட்டது ; இன்று முதல் துரை வைகோ என்ற புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது’
’தேர்தல் முடிந்ததும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி சில முக்கியமான முடிவுகளை அறிவிக்கப்போகிறேன், சில நிர்வாக மாற்றங்களையும் செய்ய தீர்மானித்திருக்கிறேன்’ இப்படி பேசியவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. கடந்த பிப்ரவரி மாதம் நெல்லையில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தனக்கே உரித்தான கம்பீரம் இன்றி, உடல் சோர்ந்து, சொற்கள் அவரிடமிருந்து மெல்ல வந்து விழுந்தது.
இவ்வளவு நாள் கட்சியை ரத்தமும் சதையுமாக கட்டி காப்பாற்றி வந்தேன். இனி கட்சியை வலுப்படுத்த அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்று உருக்கமாக பேசி, மதிமுகவிற்கு கிடைத்த தொண்டர்கள் போன்று மாணிக்க கட்டிகள் எந்த இயக்கத்திற்கும் கிடைத்தது இல்லை என்று அந்த கூட்டத்திலேயே கலங்கினார் வைகோ.
அப்போதிலிருந்தே இரண்டு செய்திகள் கச்சை கட்டி பறக்கத் தொடங்கின. ஒன்று மதிமுக-வை மீண்டும் வைகோ திமுகவோடு இணைக்கப் போகிறார் என்பது, இன்னொன்று, மதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து தான் விலகிக்கொண்டு, கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் அந்த பொறுப்பை தனது மகனான துரை.வையாபுரிக்கு கொடுக்க போகிறார் என்பதும்தான். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துரை. வையாபுரியோ இதுவரை எனது தந்தைக்கு ஒரு நல்ல மகனாக இருந்தேன், இனி கட்சியில் ஒரு சாதாரண தொண்டனாகதான் இருப்பேன் என்று சொன்னதோடு, பதவியோ, பொறுப்போ வேண்டும் என்று தனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, அதன் மீது தனக்கு இஷ்டமும் கிடையாது எனவும் தெரிவித்திருந்தார்.
அரசியலில் ஈடுபடும் பெரும்பாலானோர் பதவி கிடைக்கும் வரை சொல்வது, தனக்கு பதவி மீதோ, பொறுப்பு மீதோ எந்த ஆசையும் இல்லை, அப்படி எதிர்பார்த்தும் தான் அரசியலுக்கு வரவில்லை என்பதுதான். அதேபோன்றுதான் நேற்று முன் தினம் வரை துரை.வையாபுரியும் சொல்லி வந்தார்.
மதிமுக கூட்டங்கள், நிகழ்ச்சிகள் தொண்டர்களின் குடும்ப விழாக்கள் என அனைத்து நிகழ்வுகளிலும் வைகோவுக்கு இணையான முக்கியத்துவம் துரை.வையாபுரிக்கு கொடுக்கப்பட்டு வந்தது. அங்கு வைக்கப்படும் கட் - அவுட், பேனர்களில் வைகோவுக்கு அடுத்தப்படியாக துரை.வையாபுரி புகைப்படம் பளிச்சிடுவதே அதற்கு சான்று. தன்னை ஒரு சாதாரண தொண்டன் என சொல்லிக்கொள்ளும் துரை.வையாபுரிதான் மதிமுக சார்பில் கொரோனா காலங்களில் வழங்கப்பட்ட நிவார பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்தினார்.
இப்படி இருக்கும் நிலையில், நேற்று கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய துரை.வையாபுரி, நான் அரசியலில் அதிக நாட்டமில்லாமல் இருந்தேன், தந்தை வைகோ வெளியில் வர முடியாத கொரோனா காலக்கட்டத்தில், தொண்டர்களின் உணர்வை மதித்து, அவர்களது இல்ல நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொண்டு வந்தேன். ஆனால், இன்று சமுதாய பணியில் நான் என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுவிட்டேன் என்று பேசியதோடு, ’துரை வையாபுரி என்ற முதல் அத்தியாயம் நேற்றுடன் முடிந்துவிட்டது ; இன்று முதல் துரை வைகோ என்ற புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது’ என்று கூறி தான் அரசியலிலும் கட்சி பணியிலும் முழுமையாக ஈடுபடபோவதை இதன் மூலம் தொண்டர்களுக்கு தெரியப்படுத்தி, தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில் பார்த்தால், மதிமுக துணைப் பொதுச்செயலாளர்களாக இருந்த நாசரேத்துரை, தஞ்சாவூர் துரைபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் உடல்நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தனர். இப்போது காலியாக இருக்கும் இந்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு துரை.வையாபுரிக்கு முதலில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முதலில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மெல்ல, மெல்ல மதிமுகவின் தலைமைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியையும் துரை.வையாபுரிக்கு வழங்கி, கட்சிக்கு புத்துயிர் ஊட்டி, இளைஞர்களை கவரும் வகையில் கட்சியை மறுகட்டமைப்பு செய்ய வைகோ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் வெளிப்பாடே துரை வையாபுரி கடலூரில் இப்படி பேசியது என சொல்கிறார்கள் மதிமுக தொண்டர்கள்.
வைகோவுக்கு சமீப நாட்களாக உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டுள்ள நிலையில், தீவிர கட்சி பணிகளிலும் அரசியலிலும் ஈடுபட அவரது உடல்நிலை ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரிகிறது. இதனால், கட்சியின் செயல்பாடுகள் முடங்கிவிடக் கூடாது என்பதற்காக துரை.வையாபுரிக்கு முதலில் துணைப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை வழங்கி, தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தவும் வைகோ திட்டமிட்டு வருகிறார் என்றும், விரைவில் மதிமுக பொதுக்குழுவை கூட்டி கட்சி பொறுப்பு, கட்டமைப்பு மாற்றம் உள்ளிட்ட சில முக்கிய முடிவுகளை வைகோ அறிவிப்பார் என்றும் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கேட்க துரை.வையாபுரியை தொடர்புகொள்ள முயன்றபோது அவரது உதவியாளர் ஷங்கர் தொலைபேசியை எடுத்து, துரை வையாபுரியிடம் தகவல் தெரிவித்து பேச சொல்வதாக தெரிவித்தார்.