‘தாக்குதலில் ஈடுபட்டவர் எஸ்டிபிஐ நபராக இருந்தால், கட்சியில் இருந்து நீக்கப்படுவார்’ - எஸ்டிபிஐ கட்சியின் கோவை மண்டல தலைவர்
அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தை பாஜக தாமாக பெட்ரோல் குண்டுகள் வீசிக்கொண்டு அமைதியை கெடுக்க பார்க்கிறார்கள்.
சேலம் மாநகர் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வருபவர் ராஜன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ராஜன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாட்டில் சரியாக பற்றாத காரணத்தால் தீயினால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே இந்த சம்பவத்தை கண்ட எதிர்வீட்டு நபர் தியாகராஜன் என்பவர் ராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ராஜன் வீட்டிற்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் வீட்டில் நேற்று அதிகாலை மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்றி வீட்டின் முன்பு வீசியது தொடர்பாக ஏழு பேரை அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் எஸ்டிபிஐ நிர்வாகிகள் காதர் உசேன் மற்றும் சையத் அலி ஆகிய இருவர் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று எஸ்டிபிஐ கட்சியின் கோவை மண்டல தலைவர் ராஜா உசேன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, எஸ்டிபிஐ கட்சியில் சேலம் மாவட்ட தலைவர் சையத் அலியை பொய் வழக்கில் போலீசார் கைது செய்தனர். அசாதாரண சூழ்நிலையில் பாஜக அழுத்தம் காரணமாக அவரை கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய நபர்கள் என்று கூறி இருவரை கைது செய்யும் பொருட்டு போலீசார் வந்தனர்.அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில் பாஜக தாமாக பெட்ரோல் குண்டு வீசிக் கொண்டு அமைதியைக் கெடுக்க பார்க்கிறது. விசாரணை என்ற பெயரில் காவல் துறை அழைத்து தொல்லை கொடுக்கிறார்கள். இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து முறையிட்டு உள்ளோம், வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அது கண்டிக்கத்தக்கது.
சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசியது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவரை அழைத்து சென்று விசாரணை செய்த நிலையில், காவல் நிலையம் சென்று இது தொடர்பாக கேட்டசையத் அலியை காவல்துறை கைது செய்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். எஸ்டிபிஐ கட்சி ஜனநாயக முறைப்படி செயல்படுகிறது வன்முறையை என்றும் ஏற்காது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் எஸ்டிபிஐ நபராக இருந்தால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிவித்தார். சேலத்தில் முஸ்லிம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனை கைவிட வேண்டும். இதுபோன்ற போக்கை கண்டித்து இன்னும் சிலதினங்களில் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் பேசினார்.மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை மற்றும் அதிகாரிகளை பகிரங்கமாக மிரட்டுகிறார். சேலத்தில் குற்றம் செய்யாமலே குற்றத்தை ஒற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுதுதான் பிரபலமாவார்கள் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர் அவர்கள் மீது புகார் அளிக்க உள்ளோம் என்றும் கூறினார்.