"பணம் செலவு செய்தால் ஸ்டாலினையே அதிமுக பொதுச் செயலாளர் என்பார்கள்" - டிடிவி.தினகரன் சரவெடி
அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு 25 லட்சம் முதல் ஐந்து கோடி வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றுகையில், காலத்தின் கோலம் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருந்த பொறுப்பில் அமர்வதற்கு அரக்கர்கள் போல் துடித்து கொண்டுள்ளார்கள். பணம் மூட்டைகளுடன் பதவியைப் பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதிமுகவில் ஒவ்வொரு கைதட்டலுக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுத்தால்தான் கைத்தட்டில் வரும். ஆனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வந்த தொண்டர்கள் அனைவரும் பணம் கொடுத்து அழைத்து வந்தவர்கள் அல்ல.
அதிமுக கட்சியின் பொதுக்குழுவில் 97 சதவீதம் ஆதரவு உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார்கள். ஒருவர் பதவிக்கு வர துடிக்கிறார், ஒருவர் தடுக்க முயற்சிக்கிறார். பொதுச்செயலாளர் பதவி அடிப்படை உறுப்பினர் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று எம்ஜிஆர் எழுதி வைத்து சென்றுள்ளார். எந்த ஒரு விதியிலும் பொதுக்குழுவின் மெஜாரிட்டி வைத்து திருத்தலாம். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர்தான் தேர்வு செய்ய செய்யமுடியும் என்று எம்ஜிஆர் எழுதிவைத்து சென்றுள்ளார்.
அதை ஜெயலலிதா அவர்கள் பலப்படுத்தினார். எம்ஜிஆர், ஜெயலலிதா லட்சியம் கொள்கைகளை எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்று கூறினார்கள். அதிமுகவை அழிக்க நினைப்பதாக பாஜக, திமுக மீது தவறுதலாக கூறுகிறார்கள். யார் அழிக்கிறார்கள் என்று மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் பேசினார்.
பொதுக்குழு உறுப்பினர் என்ற பெயரில் குள்ளநரி கூட்டங்கள் உள்ளது. பணம் செலவு செய்தால் திமுக ஸ்டாலினை கூட பொதுச் செயலாளர் என்று அறிவித்து விடுவார்கள். ஓ பன்னீர்செல்வம் துரோகிகள் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு வீழ்ந்து வருகிறார். பழனிசாமி பற்றி தெரிந்து கொண்டு, தவறான அறிவுரைகளைக் கேட்டு அங்கு போய் சேர்ந்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் போய் உண்மையை உடைத்து கூறிவிட்டு வந்துள்ளார்கள். அதிமுக கட்சி திவாலாகி வருகிறது. எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி, ஜெயலலிதா கட்டிகாத்த அதிமுக மூழ்குகின்ற கப்பலாக உள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற செயல், உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரும் தலைகுனிந்து வருகிறார்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான் உண்மையான அம்மாவின் கட்சி என்பதை தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள். திமுகவின் ஆட்சியை வீழ்த்தி உண்மையான அதிமுக ஆட்சியை கொண்டுவர ஆற்றல் மிக்க இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிகழ்த்துவோம் என்றும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொதுச் செயலாளர் பதவியை தேர்ந்தெடுக்க முடியும். எந்த காலத்திலும் மாற்ற முடியாது என்று விதி கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த அதிமுக கட்சியில் 3000 பேர் நிர்வாகிகள் என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமியின் பினாமிகள் தேர்தல் என்ற பெயரில் தவறுகள் செய்து வருகிறார்கள். இதற்கு ஓ பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டது தான் தவறானசெயல். நேர்மையான முறையில் தேர்தல் நடத்தவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதிமுகவில் 98 சதவீதம் ஆதரவாளர்கள் உள்ளதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி, ஏன் பயந்து கொள்ள வேண்டும், ஏன் தேர்தல் உடனடியாக நடத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்” என்று கேள்வி எழுப்பினார்.
“மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி, சட்டத்தின் ஓட்டைகளில் 3000 பேர் வைத்துக் கொண்டு பொதுக்குழுவில் ஒற்றை தலைமையோ அல்லது பொதுச் செயலாளராகவோ பதவியேற்று குறுக்குவழியில் அமர பார்க்கிறார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பல ஆயிரம் கோடி செலவு செய்துதான் மேற்கு மண்டலத்தில் அதிமுக வெற்றி பெற்றனர். ஆனால் தற்போது சொந்த நகராட்சியில் கூட வெற்றி பெறமுடியவில்லை, ஏனென்றால் அதைவிட அதிகளவில் திமுக செலவு செய்துள்ளது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணம் ஒரு அளவிற்கு தான் வேலை செய்யும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு 25 லட்சம் முதல் ஐந்து கோடி வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக சொல்வது ஒன்று செய்வது வேறு பொய்யான வாக்குறுதி சொல்லி, திராவிட மாடல் என்று கூறி திமுக தலைவர் ஏமாற்றி வருகிறார்” எனத் தெரிவித்தார்.