Sasikala On One year of DMK Governance : நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவைப்போல் ஆட்சி செய்வேன் - சசிகலா
"திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்" என்றார்
”நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தாரோ, அதேபோல் ஆட்சி செய்வேன்” என்று வி.கே.சசிகலா கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான சசிகலா திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்தபிறகு அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் திமுகவின் ஓராண்டு ஆட்சியை அவர் விமர்சித்தார். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை, மக்கள் யாரும் திருப்தியாக இல்லை. இதுதான் திமுக அரசின் ஓராண்டு கால ஆட்சி என்று விமர்சித்துள்ளார்.
அவரது பேட்டியில், “திமுக ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. ஆனால், மக்களோடு மனசு நிறைந்ததா எனத் தெரியவில்லை. சட்டம்- ஒழுங்கு சரியில்லை. மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். மின்சார தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. விவசாயிகளுக்கு ஒரு லட்ச இலவச மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மின்சாரம் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள். ஒராண்டு ஆகியும் அது நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தது பிறகும் முதியோர் தொகை கொடுக்கப்படாமல் இருக்கிறது. மொத்தத்தில் மக்கள் மனதில் வெறுப்புதான் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் மக்கள் யாரும் திருப்தியாக இல்லை. இதுதான் இந்த ஓராண்டு கால ஆட்சியின் பலனாக இருக்கிறது” என்றார்.
நீங்க ஆட்சிக்கு வந்தால் எந்த மாதிரியான ஆட்சியை தருவீர்கள் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ”ஜெயலலிதா ஆட்சியை எப்படி கொடுத்தார்களோ. அதுபோன்ற ஆட்சியை கொடுப்பேன்” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது. பெண்கள் இரவு 9 மணிக்கு மேல் வெளியே செல்ல பயப்படுகிறார்கள். திமுக ஆட்சியில் அக்கட்சியை சேர்ந்தவர்களே போலீஸ் நிலையத்தில் அதிகம் காணப்படுகிறார்கள். அதை எல்லாம் கட்டுப்படுத்த வேண்டும். சிறுவியாபாரிகளிடம் திமுகவினர் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளும் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு செல்கிறதா இல்லை என்று தெரியவில்லை” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்