‘ஆளுநர் மூலம் நானும் பாதிக்கப்பட்டேன், நான் அனுபவித்ததையே ஸ்டாலினும் அனுபவிக்கிறார்’ - நாராயண சாமி
ஆளுநர் மூலம் மத்திய அரசு தரும் தொல்லையால் நானும் பாதிக்கப்பட்டேன், நான் அனுபவித்ததையே தமிழக முதல்வர் ஸ்டாலினும் அனுபவிக்கிறார் -முன்னாள் முதல்வர் நாராயணசாமி
ஆளுநர் மூலம் மத்திய அரசு தரும் தொல்லையால் நானும் பாதிக்கப்பட்டேன், நான் அனுபவித்ததையே தமிழக முதல்வர் ஸ்டாலினும் அனுபவிக்கிறார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடு முழுவதும் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் புதுச்சேரி பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். இதன் முதல் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் பங்கேற்றேன். வருகிற 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவாக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடக்கிறது. புதுச்சேரியில் மோடி அரசின் மக்கள் விரோத செயல்கள், விலைவாசி உயர்வு, ஆட்சி கவிழ்ப்பு, மத கலவரம் ஆகியவற்றை எடுத்துச்செல்லும் வகையில் பாதயாத்திரை நடைபெறும். மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் தொகுதி தோறும் குழுக்கள் அமைத்துள்ளோம்.
சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய மோடி அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மத்திய பாஜக அரசு இரட்டை ஆட்சி முறையை கொண்டுவந்து ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படுகிறது எனக் கூறியுள்ளார். இதை முழுமையாக வரவேற்கிறேன். புதுச்சேரியில் என் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, ஆளுநர் மூலமாக ஆட்சியை முடக்கினர். ஆளுநரை வைத்து தொல்லை தந்தனர். நானும் பாதிக்கப்பட்டேன். நான் அனுபவித்ததையே தமிழக முதல்வர் ஸ்டாலினும் அனுபவிக்கிறார்.
புதுவை பொறுப்பு கவர்னர் தமிழிசை சாவர்க்கர் தியாகி என்றும், அவருக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள தயார் என்றும் கூறியுள்ளார். அவர் சுதந்திர போராட்ட தியாகியின் குடும்பத்தை சேர்ந்தவர். தப்பித்தவறி பாரதிய ஜனதாவில் உறுப்பினராகி, கவர்னராக உள்ளார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தோற்றுவித்தவர் சாவர்க்கர். அவரை சுதந்திர போராட்ட தியாகியாக ஏற்க முடியாது. அந்தமான் சிறையில் இருந்தபோது, சிறையிலிருந்து வெளியே வர ஆங்கிலேயர்களுக்கு 7 மன்னிப்பு கடிதங்களை எழுதினார். இதனால் நிபந்தனையோடு அவர் விடுவிக்கப்பட்டார். வெள்ளையர்கள் ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். எனவே அவர் சுதந்திர போராட்ட தியாகி அல்ல. கவர்னர் தமிழிசை சாவர்க்கர் சுயசரிதையை படிக்க வேண்டும்.
பாரதிய ஜனதா சரித்திரத்தை மாற்ற நினைக்கிறது. இதை மக்கள் ஏற்கமாட்டார்கள். ரங்கசாமி தலைமையிலான அடிமை ஆட்சி விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டில் எவ்வளவு நிதி பற்றாக்குறை உள்ளது? என தெரியும். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. ஆனால் தினந்தோறும் கொலைகள் நடக்கிறது. கொலை நகரமாக புதுவை மாறியுள்ளது. புதுச்சேரி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதேநிலை நீடித்தால் சுற்றுலா பயணிகள் வருகை கேள்விக்குறியாகிவிடும். பொருளாதாரம் வீழ்ச்சிய டையும். ரங்கசாமியின் அவல ஆட்சிக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்