"பைசா செலவில்லாம ஜெயிக்க வச்சதால நேருவை புகழுறாரு": காங்கிரஸ் எம்பி-யை கலாய்த்து தள்ளிய துரைமுருகன்
திமுக பொது செயலாளர் துரைமுருகன் எல்லோரையும் வழக்கம் போல கலாய்த்து தள்ளினார். அதுமட்டுமின்றி திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசை ஒரு படி மேலே சென்று வெளிப்படையாக கலாய்க்க, அரங்கம் அதிர்ந்தது.
திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் கடைசி சகோதரர் மறைந்த கே.என்.ராமஜெயத்தின் மகன் திருமண விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கிய நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், கி.வீரமணி உட்பட அனைவரும் கலந்துகொண்டனர். அமைச்சர் நேருவுடன் 3 சகோதரர்கள் உடன் பிறந்திருந்தாலும் அவருக்கு அவரது கடைசி தம்பியான கே.என்.ராமஜெயம் மீது என்றுமே தனிப்பட்ட பாசம் உண்டு. ஆரம்பக்காலத்தில் அமைச்சர் நேருவுக்கு பக்கபலமாக நின்று அரசியலில் அவர் இந்தளவுக்கு வளர்ச்சியை எட்டிப்பிடிக்க சாதுர்யமான பணிகளை செய்து கொடுத்தவர் ராமஜெயம். இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்ற ராமஜெயம் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். ஆனால் இன்று வரை கொலையாளிகள் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனது சகோதரர் திரு.கே.என்.ராமஜெயம் அவர்களின் மகன் திரு.விநீத்நந்தன் – அக்ஷயா ஆகியோரது திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்தி பேசிய திருநாவுக்கரசு எம்.பி, கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/GPw1JYz3L4
— K.N.NEHRU (@KN_NEHRU) March 16, 2022
தம்பியின் இழப்பை இன்றுவரை ஈடு செய்ய முடியாமல் தவித்து வரும் அமைச்சர் கே.என்.நேரு, தம்பியின் மகன் திருமணத்தை தனது மகன் திருமணத்தை போலவே சிரத்தை எடுத்து நடத்தி முடித்திருக்கிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒருவர் விடாமல் அழைப்பு விடுத்து, முதல்வர் ஸ்டாலினை தலைமை தாங்க வைத்து திருச்சி மாவட்ட திமுகவினரை சென்னைக்கு அழைத்துச்சென்று ஒரு மினி திருவிழாவை போல் நடத்தி முடித்திருக்கிறார் நேரு. இந்த நிகழ்வில் பேசியவர்கள் அனைவரும், ஊராட்சி துறை அமைச்சர் கே.என். நேருவை உயர்த்தி பேசினர். தோழமை கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக தலைவர்களும் நேருவை உயர்த்தி பேச எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு மேடையில் அமர்ந்திருந்த, திமுக பொது செயலாளர் துரை முருகன் எல்லோரையும் வழக்கம் போல கலாய்த்து தள்ளினார். அதுமட்டுமின்றி திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசை ஒரு படி மேலே சென்று வெளிப்படையாக கலாய்க்க, அரங்கம் அதிர்ந்தது.
என் அன்புகுரிய சகோதரர் திரு.கே.என்.ராமஜெயம் அவர்களின் மகன் திரு.விநீத்நந்தன் – அக்ஷயா ஆகியோரது திருமண விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி பேசிய மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.#DMK #MKstalin #KNNehru pic.twitter.com/cpFPqhCCuS
— K.N.NEHRU (@KN_NEHRU) March 16, 2022
அவர் பேசுகையில், "நானும் வந்ததில் இருந்து பார்க்கிறேன், மணமகனை விட்டுவிட்டார்கள், மணமகளை விட்டு விட்டார்கள், எல்லாரும் நேருவையே புகழ்கிறார்கள். அதிலும் திருநாவுக்கரசு புகழ் மழையை பொழிந்துவிட்டார். ஏன்னா கால் ரூபா செலவு இல்லாம ஜெயிக்க வச்சவரு அவரு. என்னையும் ஜெயிக்க வச்சா நானும் அப்படித்தான் பேசுவேன்." என்று கூற சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது. மேலும் பேசிய அவர் தானும் நேருவின் அழைப்பில்தான் வந்துள்ளேன், ஆனால் நான் பெண் வீட்டுக்காரன், பெண்ணுக்கு வேலூர் மாவட்டத்தில், ஒரு அழகான சிறிய கிராமம். ஒரு நல்ல குடும்பம், எனக்கு ஒட்டு போடும் குடும்பம் என்று அவரையும் கலாய்த்தார். அவருக்கு பிறகு விழாவை நடத்தும் அமைச்சர் நேரு நன்றியுரை வழங்க, கடைசியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை பேசி முடித்தார்.