ADMK: "சேந்தாதான் ஜெயிக்க முடியும்" இபிஎஸ்-க்கு தூது விடும் ஓபிஎஸ் - மனம் இறங்குவாரா எடப்பாடியார்?
அ.தி.மு.க.வின் பிரிந்து கிடக்கும் சக்திகள் சேர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஒருங்கிணைக்கும் பணியில் சில நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இணைந்தால்தான் வெற்றி:
இந்த சூழலில், திண்டுக்கல்லில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, யாரும் வெல்ல முடியாத இயக்கமாக அம்மா (ஜெயலலிதா) வளர்த்தெடுத்தார். இன்று அ.தி.மு.க.வின் சக்திகள் பிரிந்து கிடக்கின்ற சூழல் இருக்கிறது. அனைத்து சக்திகளும் இணைந்தால்தான் எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் வெற்றி பெற முடியும் என்ற சூழல் இருக்கிறது என்றார்.
மேலும், அ.தி.மு.க. ஒன்றிணைந்தால் எடப்பாடி பழனிசாமி அதில் இடம்பெறுவாரா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சிரித்துக் கொண்டே அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். மேலும், ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை என்றும், யாருக்கு வாக்களிப்போம் என்பது ரகசியம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இபிஎஸ்-க்கு மறைமுக தூது:
வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டுமென்றால் அ.தி.மு.க.வை மீண்டும் பலம் பெறச் செய்ய வேண்டும் என்று அந்த கட்சித் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தென்மாநிலத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக சசிகலா - தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் உள்ளனர். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை சசிகலா நேரடியாக அரசியல் களத்தில் இறங்காவிட்டாலும், அ.தி.மு.க.வின் முக்கிய முடிவுகளில் சசிகலாவின் பங்களிப்பு அதிகளவில் இருந்ததாக கூறப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாக பல முறை எடப்பாடி பழனிசாமிக்கு தூது விடுத்து வருகிறார். சசிகலாவும் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அடுத்தடுத்து பல முக்கிய மாற்றங்களை அ.தி.மு.க.வில் எதிர்பார்க்கலாம் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாக பல முறை எடப்பாடி பழனிசாமிக்கு தூது விடுத்தும் அவர் தரப்பினர் இதுதொடர்பாக பெரியளவு ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். சசிகலா தரப்பினரை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டால், அ.தி.மு.க.வின் தலைமை யார்? என்பதில் மீண்டும் மோதல் போக்கு ஏற்படும் என கருதுவதால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அவர்களுடன் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

