அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அதிமுக அடையாளம் இல்லாமல் ஓபிஎஸ்! தொண்டர்களுக்கு அதிர்ச்சி..!
தன் அரசியல் வாழ்வில் முதல் முறையாக அஇஅதிமுக கட்சிக்கொடி இன்றி பயணித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
![அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அதிமுக அடையாளம் இல்லாமல் ஓபிஎஸ்! தொண்டர்களுக்கு அதிர்ச்சி..! Former Chief Minister O. Panneerselvam traveled without AIADMK party flag for the first time in his political career அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அதிமுக அடையாளம் இல்லாமல் ஓபிஎஸ்! தொண்டர்களுக்கு அதிர்ச்சி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/af0a04f3a6d3a415aa190805291ed99d1699497220358113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
![அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அதிமுக அடையாளம் இல்லாமல் ஓபிஎஸ்! தொண்டர்களுக்கு அதிர்ச்சி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/ce10956e0beeecf3f4b09d2529c80e7a1699497349137113_original.jpg)
அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை.. மேல்முறையீடு செய்யும் ஓபிஎஸ்..
அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, பன்னீர் செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது. இதுவரை பதில் மனுதாக்கல் செய்யவில்லை, தன்னை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி அவகாசம் வாங்கினார்கள், ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார்.
ஒபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நம்பர் ஆகிவிட்டது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம், குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதி சதீஷ்குமார், எத்தனை முறை இந்த விவகாரத்தில் இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனைமுறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார். இ.பி.எஸ். தரப்பில் நான்கைந்து மாதங்களில் முக்கியமான எம்.பி தேர்தல் வரவுள்ளது. ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக அதே பதவியை பயன்படுத்துகிறார். எங்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவிக்கிறார். பொதுமக்கள் மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என வாதிடப்பட்டது.
உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் மனு குறித்து பன்னீர் செல்வம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை நவம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் பன்னீர்செல்வம் தரப்பில் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி முறையிட்டார். மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால், மேல் முறையீட்டு வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)