'சசிகலா-வை சந்திக்கிறாரா ஓபிஎஸ்?’ இன்றைய ஆலோசனைக்கு பிறகு அரசியலில் அடுத்தக் கட்ட முடிவு..!
’சசிகலா-வை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், மீண்டும் சசிகலா-வையே நாடி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது’
அதிமுக-வின் பெயர், கட்சிக் கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவசர கூட்டத்தை இன்று ஓபிஎஸ் தன்னுடைய சென்னை இல்லத்தில் நடத்தவுள்ளார்.
காரில் கொடியை கழற்ற சொன்ன ஓபிஎஸ்
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அதிமுகவின் பொருளாளர், அவர் சிறைக்கு சென்றபோது தமிழ்நாடு முதலமைச்சர் என்று அதிகாரமிக்க பதவிகளை வகித்த ஓபிஎஸ் தற்போது எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்த பொதுக்குழு செல்லாது என்ற வழக்கை தொடுத்து சட்டபோராட்டம் நடத்தி வருகிறார். அதே நேரத்தில், தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதையும் விட்டுத் தராமல் கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றையும் பயன்படுத்தி வந்தார். இதற்கு எதிராக அதிமுக சார்பில் தொடக்கப்பட்ட வழக்கில் கட்சி கொடி, சின்னம், பெயர் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை துளியும் எதிர்ப்பார்க்காத ஓபிஎஸ் அதிர்ச்சியில் உறைந்து போனார். தன்னுடைய காரின் முன் பல ஆண்டுகளாக கட்டப்பட்டிருந்த அதிமுக கொடியை கனத்த மனதுடன் தனது உதவியாளரிடம் சொல்லி கழட்ட சொன்னார்.
இன்று அவசர ஆலோசனை
இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தனது இல்லத்தில் ஓபிஎஸ் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். இதில், அவரது ஆலோசகராக செயல்படும் பண்ரூட்டி ராமசந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். இதில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட முக்கிய கருத்துகள் விவாதிக்கப்படுகிறது.
சசிகலாவை சந்திக்கிறாரா ஓபிஎஸ்?
இன்று நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு சசிகலா-வை அவர் நேரில் சென்று சந்திப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் இன்று செல்லவில்லை என்றாலும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு சசிகலாவை சந்திப்பது உறுதி என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலா-வை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தி டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் அதிமுகவை விட்டு நீக்க வைத்த ஓபிஎஸ், தற்போது மீண்டும் சசிகலா-வையே நாடி செல்லும் விளையாட்டை காலம் நிகழ்த்தி வருகிறது. ஏற்கனவே, அவர் டிடிவி தினகரனை சந்தித்து ஒன்றாக பயணிப்போம் என்று அறிவித்துவிட்ட நிலையில், சசிகலாவை விரைவில் சந்திப்பேன் என்று பலமுறை கூறியுள்ளார். நீதிமன்றம் உத்தரவையடுத்து கையறு நிலையில் இருக்கும் ஓபிஎஸ் வேறு வழியின்றி சசிகலாவை சந்தித்து தனது அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்யும் முயற்சியில் இறங்கவுள்ளார்.
அ.ம.மு.கவில் இணைய திட்டமா ?
இடைக்கால உத்தரவிற்கு இடைக்கால் தடை வாங்கு முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு முயன்று வந்தாலும் இறுதி உத்தரவும் ஓபிஎஸ்-க்கு எதிராக வந்து அவர் அதிமுகவின் பெயரை கூட பயன்படுத்த முடியாத சூழல் வந்தால், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தோடு இணைந்து அதிமுக-வை மீட்டும் கள அரசியலில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆனால், உச்சநீதிமன்றம் வரை எல்லா கதவுகளை தட்டியபிறகு, எந்த கதவுகளும் திறந்து அவருக்கு புதிய ஒளியை காட்டாதப்பட்சத்தில் டிடிவி தினரோடும் சசிகலாவோடும் இணைவதை தவிர அவருக்கு வேறு வாய்ப்புகள் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காலதாமதம் செய்யாமல் விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஒ.பன்னீர்செல்வமும் சசிகலாவும் உள்ளனர். இந்த தேர்தலை விட்டுவிட்டு மீண்டும் 2026 சட்டப்பேரவை தேர்தல் வரை காத்திருந்தால் இப்போது மிச்சம் மீதி இருக்கும் செல்வாக்கும் கூட காற்றில் காணாமல் போகலாம் என்பதை இருவரும் இப்போது நன்கு உணர்ந்துவிட்டதாக தெரிகிறது. அதனடிப்படையில், சசிகலாவும் ஓபிஎஸ்-ம் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவுள்ளனர்.