Sengottaiyan Join TVK: நாளை தவெக-வில் இணையும் செங்கோட்டையன்? கொங்கில் கோலாேச்சுவாரா விஜய்?
Sengottaiyan Vijay Meeting: விஜய்யை அவரது வீட்டிற்கே சென்ற செங்கோட்டையன் நாளை பனையூரில் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக-வின் பலமாக கொங்கு மண்டலத்தில் இருந்த செங்கோட்டையன் தனது அரசியல் வாழ்வில் முதன்முறையாக அதிமுக-வில் இருந்து வேறு கட்சிக்கு தாவுகிறார்.
தவெக-வில் செங்கோட்டையன்:
அதிமுக ஒருங்கிணைப்பு கோஷத்தை முன்னெடுத்து எடப்பாடி பழனிசாமியுடன் மோதலில் ஈடுபட்ட செங்கோட்டையன் அதிமுக சாம்ராஜ்யத்திற்கே விடை கொடுத்துவிட்டார். இந்த நிலையில், கொங்கு பகுதியில் செல்வாக்கு மிகுந்த மற்றும் அனுபவமிக்க செங்கோட்டையனை தங்கள் வசம் கொண்டு வர திமுக-வும், தவெக-வும் போட்டி போட்டனர்.
செங்கோட்டையன் இன்று காலை தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த உடன் அமைச்சர் சேகர்பாபுவே நேரில் சென்று செங்கோட்டையனை சந்தித்துப் பேசினார். திமுக-வில் அவர் இணைவதற்காகவே இந்த பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், செங்கோட்டையனோ நேரடியாக தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு அவரைத் தேடிச் சென்றார்.
நாளை இணைப்பு விழா:

சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இந்த பே்சுவார்த்தையில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி அளிக்கலாம்? கட்சியில் அவரது பங்களிப்பு? தேர்தலில் அவரது செயல்பாடுகள்? குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் செங்கோட்டையன் நாளை தவெக-வில் விஜய் முன்னிலையில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் பனையூர் இல்லத்தில் அவர் கட்சியில் சேரும் விழா நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் ஆகியோர் இருந்தாலும் அனுபவ அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர், எம்ஜிஆர் - ஜெயலலிதாவுடன் நெருக்கமான நட்புறவு கொண்டவர் என்ற அடிப்படையில் செங்கோட்டையனுக்கு தக்க அதிகாரத்துடன் கூடிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
எம்ஜிஆர் காலம் முதல் அதிமுக-வில் இருந்து கருணாநிதி, மு.க.ஸ்டாலினை எதிர்த்து அரசியல் செய்துவிட்டு தற்போது திமுக-வில் இணைந்தால் தனது தொகுதியில் தனது செல்வாக்கு மிகப்பெரிய அளவில் சரியும் என்பதால் அவர் திமுக-விற்கு போட்டியாக தன்னை பிரகடனம் செய்து கொள்ளும் விஜய் பக்கம் சாய்ந்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு பிறகு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட தவெக தற்போதுதான் மீண்டு வருகிறது. இந்த சூழலில், அவர்களுக்கு செங்கோட்டையன் கட்சியில் இணைவது மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.
விஜய்க்கு முதல் வெற்றி:
இதனால், கொங்கு மண்டலத்தில் முதன்முறையாக தவெக-விற்கு என்று ஒரு பலம் உருவாகியுள்ளது என்று விஜய் தரப்பினர் நம்புகின்றனர். மேலும், செங்கோட்டையன் ஆதரவாளர்களும் தவெக-வில் அவருடன் சேர்ந்து இணைவார்கள் என்று கருதப்படுகிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவருக்கு கிடைத்த முதல் வெற்றியாக இது கருதப்படுகிறது.




















