Exit Poll Results 2024: மீண்டும் பாஜக ஆட்சி.. தனிப்பெரும்பான்மை கிடைத்ததா? ஏறுமுகத்தில் INDIA கூட்டணி!
Lok Sabha Election Exit Poll Results 2024: மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், பாஜக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மக்களவை தேர்தல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் இன்று வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. வரும் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகிறது.
பாஜகவின் கனவை இந்தியா கூட்டணி பறித்ததா? கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்குமா? அல்லது பாஜகவின் கனவை இந்தியா கூட்டணி பறிக்குமா? என வரும் செவ்வாய்கிழமை (ஜூன் 4) தெரிந்துவிடும். ஆனால், அதற்கு முன்பே, தேர்தல் முடிவுகள் யார் பக்கம் செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், பல்வேறு செய்தி நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, 353 முதல் 383 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மட்டும் 315 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்புகளின்படி, கடந்த முறையைவிட இந்த முறை அதிக தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு கடும் போட்டி அளித்த இந்தியா கூட்டணி 152 முதல் 182 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியின் நிலை என்ன? இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சி 74 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தியா கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றியுள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 45.3 சதவிகித வாக்குகளை பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் 4 முதல் 6 இடங்களையும் குஜராத்தில் 25 முதல் 26 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் 4 முதல் 6 இடங்களையும் கர்நாடாகவில் 23 முதல் 25 இடங்களையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 37 முதல் 39 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 0 முதல் 2 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது என ABP-Cvoter கணித்துள்ளது.